புலி கர்ஜிக்கிறது. நாய் குரைக்கிறது. பல மனிதக் குரல்கள் காற்றை நிரம்புகின்றன.
சந்திராப்பூரின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து (TATR) 100 கிலோமீட்டர் தொலைவில் எதுவும் அசாதாரணமாக இல்லை.
அசாதாரணமான விஷயமென்பது என்னவென்றால் அந்த விலங்கு மற்றும் மனித ஒலிகள் பதிவு செய்யப்பட்ட ஒலிகள். மங்கி கிராமத்தின் ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலிகள். பருத்தி மற்றும் துவரை விதைக்கப்பட்ட விதர்பா நிலத்தின் நடுவே ஒரு கம்பின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி, பேட்டரியால் இயக்கப்படும் பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே பம்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
“இரவில் நான் அலாரத்தை அடிக்கவில்லை எனில், காட்டுப் பன்றிகளும் நீலான்களும் (இரவுப் பிராணிகள்) என் பயிர்களை உண்டு விடும்,” என்கிறார் 48 வயது சுரேஷ் ரெங்கே வனவிலங்குகளை அச்சுறுத்த அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் திட்டத்தை விளக்கி. “குறிப்பாக அவை துவரையையும் உளுந்தையும் அழித்துவிடும்,” என்கிறார்.
வேலிகளை அடைத்தும் பிரயோஜனமில்லாததால், அவர் அக்கருவியின் இரண்டு பின் ப்ளக்கை, பேட்டரியில் இயங்கும் ஸ்ப்ரே பம்ப்பில் செருகுகிறார். உடனே விலங்கு மற்றும் மனித சத்தங்கள் காற்றை நிறைக்கின்றன.















