“என்னால் ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாது தாமதித்தால் அவ்வளவுதான்,” என லக்னோ கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மகாநகர் இடைநிலைக் கல்லூரி நோக்கி அவசரமாக சென்றபடி ரீட்டா பாஜ்பாய் கூறினார். அந்த வாக்குச் சாவடியில்தான் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி அல்ல அது.
அவர் வீட்டிலிருந்து கல்லூரி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டிஜிட்டல் தெர்மாமீட்டர், சானிடைசர் பாட்டில்கள் மற்றும் பல ஜோடி கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு காலை 5:30 மணியளவில் அவர் அந்த தூரத்தை நடந்து கடந்து கொண்டிருந்தார். பிப்ரவரி 23 அன்று, ஒன்பது மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுடன் சேர்ந்து நான்காவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் லக்னோ வாக்களிக்கவிருந்ததால், அது அவருக்கு மிகவும் மும்முரமான நாளாக இருந்தது.
உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் ஒரு பெரிய பெண்கள் குழுவிற்கு இன்னும் முடிவுகள் வரவில்லை. அம்முடிவுகள் மிகவும் துன்பகரமானதாக இருக்கலாம் என்பதும் ஒருவேளை அவை உயிருக்கே ஆபத்தாகவும் இருக்கலாம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விளைந்த அபாயங்களிலிருந்து எழும் முடிவுகள் அவை.
163,407 சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள், வாக்குச் சாவடிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எந்த முறையான எழுத்துப்பூர்வ உத்தரவும் கிடையாது. வாக்குச் சாவடிகளில்சுகாதாரத்தைப் பேணுவதே அவர்களின் பணியாக இருந்தபோதும் அவர்களுக்கென தனிப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு பெரிய அளவில் எதுவும் இல்லை. அதாவது, 2021 ஏப்ரல்-மே மாதங்களில் கோவிட் தொற்றால் 2,000 பள்ளி ஆசிரியர்கள் இறந்ததைக் கண்ட மாநிலம் அது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக, தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டிருந்தனர்.










