“இந்த அணை ஆற்றின் ஓட்டத்துக்கு நிகராக கட்டப்பட்டது,” என்கிறார் கொல்காப்பூரின் பொறியாளரான அஜித் பாட்டில். அவர் கண்பதியின் இறந்து போன நண்பரான சாந்த்ராம் பாட்டில் (லால் நிஷான் கட்சியின் துணை நிறுவனர்) மகன் ஆவார். “எந்தவித நிலமும் மூழ்கடிக்கப்படவில்லை. ஆற்றின் ஓட்டமும் கட்டுப்படுத்தப்படவில்லை. வருடம் முழுக்க தேக்கப்படும் நீர் இரு பக்கங்களிலும் உள்ள நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நேரடிப் பாசனத்துக்கு உட்படாத பகுதிகளிலிருக்கும் கிணறுகளின் வழியாக பாசனத்துக்கும் பயன்படுகிறது. குறைந்த செலவு. உள்ளூரிலேயே நிர்வகிக்கத்தக்கது. சூழலுக்கும் எந்த பாதிப்பையும் உருவாக்காதது.”
மே மாத கோடை கால உச்சத்தில், தேவையான அளவுக்கான நீர் அணையில் இருக்கும். அதன் கதவுகள் திறக்கப்பட்டு ஆற்றின் ஓட்டம் சரி செய்யப்படும். அணையின் காயல் நீரில் மீன் வளர்ப்பும் நடக்கிறது.
“1959ம் ஆண்டில் இதை தொடக்கினோம்,” எனப் பெருமையுடன் சொல்கிறார் கண்பதி பாட்டில். அணையிலிருந்து பாசனம் கிடைக்கும் பல ஏக்கர் நிலத்தை அவர் குத்தகை முறையில் சாகுபடி செய்திருக்கிறார். பிறகு குத்தகையை ரத்து செய்து நிலவுடமையாளரிடம் நிலத்தை ஒப்படைத்துவிட்டார். “என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக இந்த விஷயத்தை செய்ததாக பார்க்கப்பட்டுவிடக் கூடாது,” என்பது அவருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அந்த வெளிப்படைத்தன்மையும் முரண்களை களையும் திறனும்தான் இன்னும் அதிக விவசாயிகளை கூட்டு முயற்சிக்கு அவர் ஒப்புக் கொள்ள வைக்கக் காரணங்களாக இருந்தது. ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வாங்கி 75000 ரூபாயிலேயே அணை கட்டி முடித்து விட்டார்கள். மிச்ச 25000 ரூபாயை வங்கிக்கு உடனே திருப்பிக் கொடுத்திருக்கின்றனர். வங்கிக் கடனை சொன்ன மூன்று வருடங்களில் சரியாக திருப்பி அடைத்து விட்டார்கள். (இன்றைய நிலையில் இத்தகைய திட்டத்துக்கு 3-4 கோடி ரூபாய் தேவைப்படும். அதுவும் முறையான திட்டமின்றி அதிக செலவில் முடிந்து கட்ட முடியாத நிலையைச் சந்திக்கும்).
முதிய விடுதலை போராட்ட வீரரை நாள் முழுக்க பேச வைத்து விட்டோம். அதிலும் பெரும்பான்மை மே மாத மதிய வெயில் நேரத்தில். ஆனாலும் அவர் களைப்படையவில்லை. எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்து சென்று காட்டினார். எங்களின் ஆர்வம் அனைத்துக்கும் பதிலளித்தார். இறுதியில் பாலத்திலிருந்து நகர்ந்து எங்களின் வாகனங்களை நோக்கி நடந்தோம். அவரிடம் ஒரு ராணுவ ஜீப் இருந்தது. அவரின் பேரன் கொடுத்த அன்பளிப்பு. முரணாக, பிரிட்டிஷ் கொடி அதன் முகப்பில் வரையப்பட்டிருந்தது. இருபக்கங்களிலும் USA C 928635 என எழுதப்பட்டிருந்தது. தலைமுறைகளுக்கு இடையிலிருக்கும் இடைவெளியை பாருங்கள்.
ஜீப்பின் சொந்தக்காரர் என்னவோ வேறு கொடியை வாழ்க்கை முழுக்க பிடித்துக் கொண்டிருக்கிறார்.