அருண் ஜாதவின் மாட்டுத் தொழுவம் பெரியது. ஒரு பசு மற்றும் எருமை மாட்டுக்கான தொழுவம் இல்லை. கால்நடைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு பரிதாபகர தோற்றத்தில் இருக்கின்றன. “இதற்குப் பின்னால் ஒரு தொழுவமும் எனக்கு உண்டு,” என்கிறார் அருண். “என்னிடமிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கைக்கு இணையாக தொழுவங்களின் எண்ணிக்கை இருக்கிறது. விரைவில் விலங்குகளின் எண்ணிக்கையை தொழுவங்களின் எண்ணிக்கை தாண்டி விடலாம்.”
மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தின் அல்சுண்ட் கிராமத்தில் வசிக்கும் 39 வயது அருண் ஒரு காலத்தில் ஏழு பசு மாடுகளையும் நான்கு எருமை மாடுகளையும் வளர்த்தார். “கடந்த 15 வருடங்களில் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விற்றுவிட்டேன்,” என்கிறார் அவர். “பத்து ஏக்கர் கரும்பு நிலங்கள் என்னிடம் இருக்கின்றன. பால் உற்பத்தி ஒரு வசதியான இன்னொரு தொழிலாக இருந்தது. ஆனால் இப்போது அதுவே என் கழுத்தை இறுக்கும் சுருக்குக் கயிறாக மாறி விட்டது.”
மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் மாவட்டம் சங்லி. பால் உற்பத்தியின் முக்கிய நாளமாக இருக்கும் மாவட்டம். மாநிலத்தின் பால் உற்பத்தியில் 42 சதவிகிதம் இம்மாவட்டத்திலிருந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளும் பசு மாடுகளையும் எருமை மாடுகளையும் வளர்க்கின்றனர். அருண் போன்ற விவசாயிகளுக்கு பால் வருமானம் உபரி வருமானம். பிறருக்கு அதுதான் பிரதான வருமானம். ஆனால் தற்போது பால் விவசாயிகள் தங்களின் உடைமைகளை சுருக்கி வருகின்றனர். பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக சொல்கின்றனர்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மகாராஷ்டிராவில் ஊசலாடும் பால் விலைவாசியை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை பால் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாலைக் கொட்டியும் வீணடித்தும் இலவசமாகக் கொடுத்தும் போராட்டம் நடத்தினர். கூட்டுறவு சங்கங்களாலும் அரசாலும் பால் கொள்ளளவு செய்யப்படுகையில் அதன் விலை மாறாமல் இருந்ததாக சொல்கிறார் பல போராட்டங்களை நடத்திய அகில இந்திய விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் நவாலே.
“விலைகளை கட்டுப்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன. வேளாண் சட்டங்களிலும் இதுதான் பிரச்சினையாக சொல்லப்படுகிறது,” என்கிறார் நவாலே, செப்டம்பர் 2020-ல் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைக் குறிப்பிட்டு. கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட விவசாயிகளின் போராட்டத்தால் (பார்க்க: PARI-ன் கட்டுரைகள்) மூன்று வேளாண் சட்டங்களும் நவம்பர் 29, 2021 அன்று நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.










