கையிலிருந்த காலை ஃபில்டர் காபியை கீழே வைத்துவிட்டு “அடக் கடவுளே!” என அவள் அலறினாள். தொலைபேசியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு, அலுவலக மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்த கணவருக்கு வாசித்துக் காட்டினாள். “மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் ஏறி 16 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் - நீங்கள் இதை பார்த்தீர்களா? என்ன நடந்து கொண்டிருக்கிறது?” ஒரு நிமிடத்தில் மனம் மரத்துப் போனது. செய்தியை சில மிடறுகளில் படிக்கும் வகையில் காபியின் சூடு ஆறியிருந்தது. “கடவுளே… எத்தனை பேர்? எங்கே இருந்து இவர்கள் வந்தார்கள்?” அவளுடைய குரலில் இருந்த ஆச்சரியம் முன்பை விட சற்று தணிந்திருந்தது.
“ஒரு பாதி உமாரியாவில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். போன டிசம்பர் மாதம் நாம் சென்ற இடம்தானே அது, மனு?” சுற்றுலாவை பற்றி சொன்னதும் அவன் சில கணங்களுக்கு அவளை பார்த்து “ஆம்” என சொன்னவன் மீண்டும் தன் மின்னஞ்சல்களுக்குள் புதைய சில கணங்கள் ஆனது. “பந்தர்வ்கர் தேசியப் பூங்கா. மத்தியப்பிரதேசத்தின் பின் தங்கிய மாவட்டங்களுள் ஒன்றில் இருக்கிறது. அங்கிருந்து இவர்கள் ஜல்னாவுக்கு வேலை தேடி வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் தண்டவாளத்தில் போய் தூங்குவார்களா? என்ன ஒரு முட்டாள்தனம்?”
“அது எவ்வளவு அழகாக இருந்தது,” என்றவள் வேறு கிரகத்தில் இருப்பதை போலிருந்தாள். “ஷேஷ் ஷைய்யாவை ஞாபகம் இருக்கிறதா? அற்புதமான விஷ்ணுவின் சிலையும் அதை சுற்றியிருந்த பசுமையான காடுகளும். இந்த ஊரடங்கு முடிந்ததும் நாம் மீண்டும் அங்கொரு தடவை செல்ல வேண்டும்…”



