“இந்த 58 ஒட்டகங்களையும் நாங்கள் பறிமுதல் செய்யவில்லை,” என உறுதியாக சொல்கிறார் ஆய்வாளர் அஜய் அகாரே. அமராவதி மாவட்டத்தின் தலெகாவோன் தஷசார் காவல் நிலைய ஆய்வாளர் அவர். “மகராஷ்டிராவில் இந்த விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக எந்த பிரத்யேகச் சட்டமும் இல்லாததால், எங்களுக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் இல்லை.”
“ஒட்டகங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் அவர்.
அவற்றை பராமரிப்பவர்களுக்கும் நிலை அதுதான். ஐந்து பேரும் மேய்ச்சல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நால்வர் ராபரி சமூகத்தினர். ஒருவர் ஃபகிரானி ஜாட் சமூகத்தனர். குஜராத்தின் கச்சை சேர்ந்தவர்கள் அவர்கள். இரு சமூகத்தினருமே பாரம்பரியமாக பல தலைமுறைகளாக ஒட்டக மேய்ப்பர்களாக இருக்கின்றனர். ‘விலங்கு ஆர்வலர்’ என சொல்லிக் கொள்பவர்களால் புகார் அளிக்கப்பட்டு காவலர்களால் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் உடனடியாக நிபந்தனையற்ற பிணை வழங்கினார் மாஜிஸ்திரேட்.
”குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒட்டகங்களை வாங்கியதற்கோ அல்லது அவற்றை தங்களின் உரிமையில் கொண்டிருப்பதற்கோ தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்களின் வசிப்பிடத்துக்கான ஆவணங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை,” என்கிறார் அகாரே. பாரம்பரிய மேய்ப்பர்கள் ஒட்டகங்களுக்கான அடையாள அட்டைகளையும் அவற்றின்மீதான உரிமைக்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வித்தியாசமான சூழலை வழக்கு அடைந்திருக்கிறது. உறவினர்களாலும் மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் பிற உறுப்பினர்களாலும் ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மேய்ப்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால், ஒட்டகங்கள் கோசாலைகளில் சோர்வுற்றிருக்கின்றன. அங்கிருப்பவர்களுக்கு அவற்றின் பராமரிப்பு, உணவு முதலியவை பற்றி துளி கூட தெரியாது. இரண்டுமே ஒருவகை விலங்குகள் எனச் சொன்னாலும், ஒட்டகங்களும் பசுக்களும் வெவ்வேறு உணவு முறைகளைக் கொண்டவை. வழக்கு அதிக நாட்களுக்கு நீடித்தால், கோசாலைகளில் இருக்கும் ஒட்டகங்களின் நிலை வேகமாக மோசமடையும்.




















