"எந்த நேரத்திலும் ஆண்களில் பாதிப்பேர் பொதுவாக கிராமத்திற்கு வெளியே இருப்பார்கள். சிலர் ஹைதராபாதில் உள்ள அம்பர்பெட் மார்க்கெட்டில், சிலர் விஜயவாடாவில் பெசன்ட் சாலையில், இன்னும் சிலர் மும்பையில் உள்ள வாசி மார்க்கெட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு அருகில் அல்லது தில்லியிலுள்ள பாகர் கஞ்சில் - இவர்கள் அனைவரும் கூடைகள் மற்றும் ஊஞ்சல்களை விற்பனை செய்கின்றனர்", என்று தனது விற்பனை பயணத்தை முடித்துவிட்டு உத்தராஞ்சலில் இருந்து திரும்பி வந்த மயிலாபிலி பட்டையா கூறுகிறார்.
42 வயதாகும் பட்டயா தனது கிராமத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே நைலான் கயிறு கூடைகள், பைகள், ஊஞ்சல்கள் ஆகியவற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்ய தொடங்கினார். அதுவரை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரணாஸ்தலம் வட்டத்தில் வங்காள விரிகுடாவை ஒட்டி உள்ள சுமார் 250 பேர் வசிக்கும் சிறிய கடற்கரை கிராமமான கோவடாவில் (மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜீரூ கோவடா என்று பட்டியலிடப்பட்டுள்ளது) மீன்பிடித்தல் தான் முக்கியத் தொழிலாக இருந்தது.
பின்னர் நீர் மாசுபாடு, இப்பகுதியின் நீர் வளத்தை அழிக்க தொடங்கியது. 1990களில் இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைடிபீமாவரம் கிராமத்தில் மருந்து தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை நிலத்தடி நீரையும், கடல் நீரையும் மாசுபடுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மருந்து உற்பத்தியை அதன் அபாயகரமான கழிவுகள் காரணமாக 'சிவப்பு வகை' நடவடிக்கை என்று வகைப்படுத்துகிறது. 1990களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் செய்யப்பட்ட பிறகு, மருந்து உற்பத்தித் துறை பெருகத் தொடங்கியது, "இத்தொழில் இந்திய பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது", என்று இந்தியாவில் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் மருந்து தயாரிப்பு மாசுபாட்டின் தாக்கங்கள் என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இத்தொழில்துறை மையங்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவை இருக்கின்றன. "தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச பகுதியில் மருந்து உற்பத்தித் துறையின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட நீடித்த எதிர்மறையான தாக்கங்கள்", பற்றி இந்த அறிக்கை பேசுகிறது.









