நீங்கள் காட்டுராஜாவை காத்திருக்க வைக்கக் கூடாது.
சிங்கங்கள் வந்து கொண்டிருந்தன. குஜராத்திலிருந்து. அவை வரும்போது சிரமம் இருக்கக் கூடாது என மற்ற அனைவரும் வெளியேற வேண்டியிருந்தது.
அது நல்ல விஷயம் போன்ற தோற்றத்தைத் தந்தது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்குள் இருந்த பைரா போன்ற கிராமங்களுக்கு என்ன நடக்கப் போகிறதென உறுதியாகத் தெரியவில்லை.
“பெரும் பூனைகள் வந்தபிறகு, இந்தப் பகுதி பிரபலமாகிவிடும். சுற்றிக்காட்டும் வேலைகள் எங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் இப்பகுதியில் கடைகளையும் உணவகங்களையும் நடத்த முடியும். எங்கள் குடும்பங்கள் வசதியாகும்.” 70களில் இருக்கும் ரகுலால் ஜாதவ்தான் குனோ பூங்கோவுக்கு வெளியே இருக்கும் அகரா கிராமத்தில் நம்மிடம் இவ்வாறு சொன்னார்.
“நல்ல தரமான நீர்ப்பாசனமுள்ள நிலம் எங்களுக்குக் கிடைக்கும். எல்லா வானிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள், மொத்த கிராமத்துக்குமான மின்சாரம் மற்றும் பல வசதிகளும் கிடைக்கும்,” என்றார் ரகுலால்.
“அப்படித்தான் அரசாங்கம் எங்களுக்கு உறுதியளித்தது,” என்கிறார் அவர்.
எனவே பைரா மற்றும் 24 கிராமங்களில் இருந்த 1,600 குடும்பங்கள், குனோ தேசியப் பூங்காவிலிருந்த அவர்களது வீடுகளை விட்டுவிட்டுக் கிளம்பினார்கள். அவர்களில் பிரதானமாக சகாரியா பழங்குடிகளும் தலித்துகளும் ஏழ்மை நிறைந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் இருந்தனர். அவர்களின் வெளியேற்றம் அவசரத்தில் நிகழந்தது.
டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டன. காட்டில் வசித்தவர்கள் பல தலைமுறைகள் கடந்த உடைமைகளை ஏற்றி அவசரவசரமாக வசிப்பிடங்களை விட்டுக் கிளம்பினர். அவர்கள் பயன்படுத்திய ஆரம்பப்பள்ளிகள், அடிகுழாய்கள், கிணறுகள் மற்றும் நிலம் ஆகியவற்றையும் விட்டுச் சென்றனர். கால்நடைகள் கூட கைவிடப்பட்டன. காட்டில் இருக்குமளவுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாத இடங்களுக்கு அவற்றை அழைத்துச் செல்வது சுமையாகிவிடும்.
இருபத்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன, இன்னும் அவர்கள் சிங்கங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.


















