चाण्डालश्च वराहश्च कुक्कुटः श्वा तथैव च ।
रजस्वला च षण्ढश्च नैक्षेरन्नश्नतो द्विजान् ॥
ஒரு சண்டாளர், ஒரு கிராமத்துப் பன்றி, ஒரு சேவல், ஒரு நாய்
ஓர் உதிரப்போக்கு பெண் மற்றும் ஓர் அலி ஆகியோர் இருபிறப்பாளர் உண்ணும்போது பார்க்கக் கூடாது.
— மநு ஸ்மிருதி 3.239
திருட்டுப் பார்வை மட்டுமல்ல, ஒன்பது வயது சிறுவனின் பாவம் மிகவும் பயங்கரமானது. மூன்றாம் வகுப்பு மாணவனான இந்திர குமார் மெக்வால் தாகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். தலித் சிறுவனான அவன் ஆதிக்க சாதி ஆசிரியர்களுக்கென தனியாக வைத்திருந்த பானையிலிருந்து நீர் குடித்துவிட்டான்.
தண்டனை காத்திருந்தது. ராஜஸ்தானின் சுரானா கிராமத்திலுள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 40 வயது ஆதிக்க சாதி ஆசிரியரான சைல் சிங் என்பவரால் இரக்கமின்றி தாக்கப்பட்டான்.
25 நாட்களில் 7 மருத்துவமனைகளில் உதவி கேட்ட பிறகு சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள், ஜலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுவன் அகமதாபாத் நகரத்தில் தன் மூச்சை விட்டான்.


