ஒரு காவல் நிலையத்திற்கு முன்பாக வைத்து, தன் மனைவியை அடித்து நொறுக்குகிறோமே என்றெல்லாம் அந்த மனிதர் யோசிக்கவேயில்லை. ஹௌசாபாய் பாடீலின் குடிகாரக் கணவர், அவரை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். “அவர் அடித்த அடியில் என் முதுகு பயங்கரமாக வலித்தது,” என்று நினைவுகூர்கிறார் ஹௌசாபாய். “பவானி நகரில் [சங்லி] உள்ள ஒரு சிறிய காவல் நிலையத்தின் முன்பாக இதெல்லாம் நடந்தது”. அந்த காவல் நிலையத்தில் இருக்க வேண்டிய நான்கு காவலர்களில் இரண்டு பேர் மட்டுமே அப்போது அங்கு இருந்தனர். “இரண்டு பேர் மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போயிருந்தனர்.” பிறகு, அவருடைய குடிகாரக் கணவர், “ஒரு பெரிய கல்லை எடுத்தார். இந்தக் கல்லால் அடித்து உன்னை இங்கேயே கொன்றுவிடுவேன் என்று உறுமினார். ”.
இதைக் கேட்டு காவல் நிலையத்திற்குள் இருந்த காவலர்கள் இரண்டு பேரும் வெளியே ஓடிவந்தனர். “அவர்கள் எங்கள் சண்டையைத் தீர்க்க முயன்றனர். ” உடனிருந்த தன் சகோதரனிடம், தன்னை மோசமாக நடத்தும் கணவனின் வீட்டிற்குச் செல்லப்போவதில்லை என்று சொன்னார் ஹௌசாபாய். “நான் போக மாட்டேன், நான் போகவே மாட்டேன் என்று சொன்னேன். நான் உன்னோடேயே இருந்துகொள்கிறேன். உன் வீட்டிற்குப் பக்கத்தில் சிறிய இடம் கொடு. என் புருஷனோடு போய், செத்துப் போவதைவிட, இங்கேயே இருந்து கிடைப்பதை வைத்துப் பிழைத்துக்கொள்கிறேன். இந்த அடியை இனிமேலும் என்னால் தாங்க முடியாது” என்று சொன்னேன். ஆனால், அவரது சகோதரர் இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை.
காவல்துறையினர் இந்தத் தம்பதியை ரொம்ப நேரத்திற்கு சமாதானம் செய்ய முயற்சித்தனர். முடிவில் ஒரு வழியாக சமாதானம் செய்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு ரயிலில் ஏற்றிவிட்டனர். “அவர்களே டிக்கட்டையும் வாங்கி எங்கள் கையில் கொடுத்தனர். பிறகு என் புருஷனிடம், 'உன் பொண்டாட்டி உன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவளை ஒழுங்காக நடத்து. அவளைப் பார்த்துக்கொள். சண்டை போடாதே' என்று சொன்னார்கள்.
அதே நேரம் ஹௌசாபாயின் தோழர்கள் அந்தக் காவல் நிலையத்தை சூறையாடி, அங்கிருந்த நான்கு ரைஃபிள்களையும் எடுத்துக்கொண்டனர். இதற்காகத்தான் ஹௌசாபாயும் அவருடைய போலி 'கணவரும்' 'சகோதரரும்' அந்த வலிமிகுந்த நாடகத்தை நடத்தி, காவல்துறையினரின் கவனத்தைத் திருப்பினர். இது நடந்தது 1943ல். அப்போது அவருக்கு வயது 17. கல்யாணம் ஆகி 3 ஆண்டுகள் கழிந்திருந்தன. சுபாஷ் என்று ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை தன் உறவினர் ஒருவரிடம் விட்டுவிட்டு ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஹௌசாபாய். இந்த சம்பவம் நடந்து 74 வருடங்களாகிவிட்டன. கணவன் - மனைவி சண்டை உண்மையைப் போல தென்பட வேண்டும் என்பதற்காக அந்த போலி கணவர், சற்று ஓங்கியே அடித்துவிட்டதை எரிச்சலுடன் குறிப்பிடுகிறார் ஹௌசாபாய். இப்போது அவருக்கு 91 வயதாகிறது. மகாராஷ்டிராவின் சங்கலியில் உள்ள விடாவில் இருந்தபடி அவரது கதையை எங்களுக்குச் சொன்னார். “என் கண்களும் காதுகளும் இந்த வயதில் எனக்கு சவாலாக இருக்கின்றன. ஆனால், நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்றார் அவர்.







