பத்து நாட்களுக்கு முன்தான் திருமணத்தை தவிர வேறு வழி கிடையாது என உணர்ந்தார் ரேகா. ஒரு 15 வயது பெண்ணால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்த்தார். பெற்றோர் அவரின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. “அவள் மேலே படிக்க வேண்டுமென சொல்லி அழுதாள்,” என்கிறார் அவரின் தாய் பாக்யஸ்ரீ.
30 வயதுகளில் இருக்கும் பாக்யஸ்ரீயும் அவரின் கணவர் அமரும் குழந்தைகளுடன் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள வறிய கிராமத்தில் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருட நவம்பர் மாதத்தின்போதும் மேற்கு மகாராஷ்டிரா அல்லது கர்நாடகாவுக்கு கரும்பு வெட்ட அவர்கள் இடம்பெயருவார்கள். ஆறு மாதங்களுக்கு தொடரும் கடுமையான வேலைக்கு இருவரும் 80,000 ரூபாய் வருமானம் பெறுவார்கள். அவர்களுக்கென நிலம் ஏதும் இல்லை. கரும்பு வெட்டுவது மட்டும்தான் அவர்களின் குடும்பத்துக்கு இருக்கும் ஒரே வருமானம். தலித் சமூகமான மடாங் சாதியை சேர்ந்தவர்கள்
பெற்றோர் இடம்பெயரும் வேளைகளில் ரேகாவையும் 12 மற்றும் 8 வயதுகளில் இருக்கும் சகோதரர்களையும் பாட்டி பார்த்துக் கொள்வார் (கடந்த வருட மே மாதத்தில் அவரும் இறந்துவிட்டார்). கிராமத்துக்கு வெளியே இருக்கும் அரசுப் பள்ளியில் அவர்கள் படித்தனர். பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020-ல் பள்ளிகள் மூடப்பட்டபோது 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரேகா வீட்டில் முடங்க நேர்ந்தது. 500 நாட்கள் கடந்துவிட்டன. பீட் மாவட்டத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
”பள்ளிகளை திறக்க கொஞ்ச காலமாகும் என்பது எங்களுக்கு புரிந்தது,” என்கிறார் பாக்யஸ்ரீ. “பள்ளி திறந்திருந்தபோது ஆசிரியர்களும் குழந்தைகளும் இருந்தனர். கிராமத்தில் நடமாட்டம் அதிகமிருந்தது. பள்ளி மூடப்பட்டபிறகு, அவளை தனியே விட முடியாது. பாதுகாப்பு இருக்காது.”
எனவே பாக்யஸ்ரீயும் அமரும் ரேகாவை 22 வயது ஆதித்யாவுக்கு கடந்த வருட ஜூன் மாதம் மணம் முடித்து வைத்தனர். அந்த குடும்பம் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிராமத்தில் இருந்தது. அவர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு இடம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள்தாம். நவம்பர் 2020ல், கரும்பு வெட்டும் காலம் தொடங்கவிருந்தபோது ரேகாவும் ஆதித்யாவும் மேற்கு மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். ரேகாவின் பெயர் மட்டும் பள்ளியின் பதிவேட்டில் அப்படியே இருந்தது.
ரேகா வும் அவருக்கும் இளைய வயதில் உள்ள பெண்களும் பெருந்தொற்றின் காரணமாக திருமணத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். மார்ச் 2021-ல் வெளியான யுனிசெஃப்ஃபின் அறிக்கையின்படி பத்தாண்டுகள் முடியும்போது மேலதிகமாக ஒரு கோடி பெண் குழந்தைகள் சர்வதேச அளவில் குழந்தை மணப்பெண்களாகும் ஆபத்தில் இருப்பார்கள். மூடப்பட்ட பள்ளிகள், அதிகரிக்கும் வறுமை, பெற்றோர் மரணங்கள் மற்றும் இன்ன பிற கோவிட் பாதிப்புகளால் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் வாழ்க்கை இன்னும் சிரமத்துக்குள்ளாகும் என்கிறது அவ்வறிக்கை.
கடந்த பத்து வருடங்களில் குழந்தை திருமணம் செய்து கொண்ட பெண் குழந்தைகளின் விகிதம் 15 சதவிகிதம் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டதாகவும் யுனிசெஃப் அறிக்கை குறிப்பிடுகிறது. சமீப காலமாக நேர்ந்த வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாக பெருந்தொற்று மாறியிருக்கிறது.








