புத்துராம் சிண்டா அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார். சில அடி தொலைவில் பெரும் கறுப்பு உருவங்கள் நிலவொளியில் நின்று கொண்டிருக்கின்றன. 60 வயது புஞ்சியா பழங்குடி விவசாயி, கத்தாஃபர் கிராமத்திலிருக்கும் அவரது வீட்டின் பாதி மூடிய கதவின் இடைவெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒடிசாவின் சுனாபெடா வன உயிர் சரணாலயத்தின் மையத்தில் இருக்கும் 52 வசிப்பிடங்களில் ஒன்றில் வாழும் விவசாயிக்கு பெரிய பாலூட்டி மிருங்களை பார்ப்பதென்பது வழக்கமான விஷயம்தான்.
ஆனாலும் அவர் சொல்கிறார்,”என்னை அது காலில் போட்டு மிதித்து என் வீட்டையும் நிமிடங்களில் இடித்து விடுமோ என எண்ணி நடுங்கினேன். சற்று நேரம் கழித்து அது வீட்டுக்கு பின்பக்கம் சென்று துளசி செடிக்கு அருகே நின்று கொண்டது. நான் லஷ்மி கடவுளையும் அந்த பெரும் பாலூட்டிகளையும் கும்பிட்டேன். அந்த மந்தை என்னை பார்த்திருக்கும்.”
புத்துராமின் மனைவியான 55 வயது சுலாஷ்மி சிண்டாவும் யானையின் பிளிறல்களை கேட்டார். அச்சமயத்தில் அவர், ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கிராமத்தில் மகன்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வசிக்கும் வீட்டில் இருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து அவை கிளம்பிச் சென்றன.
டிசம்பர் 2020-ல் நடந்த அச்சம்பவத்தை நினைவுகூரும் விவசாயி, வேண்டுதல்கள் உதவியதாக நினைக்கிறார்.
டிசம்பர் 2022-ல் யானைகள் பாதையை மாற்றியபிறகு, புத்துராமுக்கு மட்டுமல்ல, நுவாபடா மாவட்டத்தின் 30 பழங்குடி கிராமங்களுக்கும் நிம்மதி.











