“எந்த பெற்றோரும் குழந்தையை இழக்கும் கொடுமையை அனுபவிக்கக் கூடாது,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத் சிங். ஜனவரி 26ம் தேதி தில்லியில் நடந்த விவசாயிகளின் ட்ராக்டர் ஊர்வலத்தில் நவ்ரீத் சிங் என்கிற தன் மகனை பறிகொடுத்தவர்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அவர்களின் வீட்டுச் சுவரில் நவ்ரீத்தின் புகைப்படம் தொங்குகிறது. 45 வயது சிர்விக்ரம்ஜீத் மற்றும் 42 வயது பரம்ஜீத் கவுர் ஆகியோர் வசிக்கும் அந்த வீட்டுக்கு ஆறுதல் தெரிவிக்கவென பலர் வந்து கொண்டிருக்கின்றனர். மகனின் மரணம் சரிசெய்ய முடியாத வெறுமையை பெற்றோரின் வாழ்க்கைகளில் உருவாக்கியிருக்கிறது. “அவன் விவசாயத்தில் எனக்கு உதவினான். எங்கள் மீது அக்கறை கொண்டவன். பொறுப்பான குழந்தை அவன்,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத்.
தில்லியில் நடக்கும் குடியரசு தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள 25 வயது நவ்ரீது தில்லி எல்லையில் இருக்கும் காசிப்பூருக்கு சென்றார். அவருடைய தாத்தாவான 65 வயது ஹர்தீப் சிங் திப்திபா, விவசாயப் போராட்டங்கள் தொடங்கிய நவம்பர் 26, 2020லிருந்து அங்குதான் இருக்கிறார். நவ்ரீத் ஒரு ட்ராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். தீன்தயாள் உபாத்யாய் மார்கில் போடப்பட்டிருந்த தடைகளுக்கருகே நின்றிருந்த தில்லி போலீசாரால் ட்ராக்டர் கவிழ்க்கப்பட்டது.
ட்ராக்டரை மீண்டும் நேராக நிமிர்த்தியதில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக நவ்ரீத் இறந்துவிட்டதாக காவல்துறை சொன்னாலும் அந்த விபத்துக்கு முன்பே அவர் சுடப்பட்டார் என அவரின் குடும்பம் நம்புகிறது. “நீதிமன்றத்தில் நாங்கள் நிரூபிப்போம்,” என்கிறார் ஸ்ரீவிக்ரம்ஜீத். நவரீத் மரணத்தை விசாரிக்க வேண்டுமென ஹர்தீப் சிங்கால் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்ததிலிருந்து வடமேற்கு உத்தரப்பிரதேச எல்லை மாவட்டமான ராம்பூரின் விவசாயிகள், மத்திய அரசு செப்டம்பர் 2020ல் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்துவிட வேண்டுமென உறுதி பூண்டிருக்கின்றனர். ராம்புரில்தான் திப்திபா இருக்கிறது. ராம்பூரின் எல்லையை தாண்டியிருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மற்றும் காஷிப்பூர் மாவட்டங்களின் விவசாயிகளும் திட்டவட்டமாக இருக்கின்றனர்.







