மார்ச் 2020-ல் கோவிட் தொற்று தொடங்கிய பிறகு, மகாராஷ்டிர ஒஸ்மனாபாத் மாவட்டத்திலிருக்கும் அருண் கெயிக்வாடின் 10 ஏக்கர் விவசாய நிலம் வெறிச்சோடி காணப்பட்டது. “நாங்கள் சோளமும் சுண்டலும் வெங்காயமும் அச்சமயத்தில் விளைவித்திருந்தோம்,” என்கிறார் அவரது மனைவியான 48 வயது ராஜஸ்ரீ.
ஆனால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சந்தைகள் மூடப்பட்டன. “எங்களுடைய விளைச்சலை மண்டிக்குக் கொண்டு செல்ல எங்களால் முடியவில்லை. மொத்த விளைச்சலும் எங்களின் கண்களுக்கு முன்னாடியே அழிந்து போனது,” என்கிறார் ராஜஸ்ரீ.
52 வயது அருணும் ராஜஸ்ரீயும் 10 குவிண்டால் சோளம், 100 குவிண்டால் வெங்காயம், 15 குவிண்டால் சுண்டல் ஆகியவற்றை விளைவித்தனர். அச்சமயத்தில் சோளத்தின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,550 ஆக இருந்தது. சுண்டலுக்கு ரூ.4,800-ம் வெங்காயத்துக்கு ரூ.1,300-ம் ஒரு குவிண்டால் விலையாக இருந்தது. விதைகள், உரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றுக்கான செலவுகளை தவிர்த்து மொத்தமாக 2,27,500 ரூபாயை அவர்கள் இழந்திருந்தனர்.
உழைப்பையும் கொட்டியிருப்பதாக ராஜஸ்ரீ சொல்கிறார். “கோவிட் வருவதற்கு சற்று முனனால்தான் அவர் ஒரு ட்ராக்டர் வாங்கினார். மாதத் தவணையான ரூ.15,000-த்தை கட்டுவது கடினமானது. வங்கியிலிருந்து நோட்டீஸ்கள் எங்களுக்கு வரத் தொடங்கின.”
எனினும் 2020ம் ஆண்டின் சம்பா பருவத்தில் (ஜுலை-அக்டோபர்) நஷ்டங்களை சரிகட்டி விட முடியுமென நம்பினார் அருண். கோவிட் தொற்றின் முதல் அலை தணியத் தொடங்கி, பாதிப்பு எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. மோசமான காலத்தை கடந்து விட்டதாக அவர் நினைத்தார். “இயல்பான நிலைக்கு திரும்பி விடுவோமென நினைத்தோம். அழிவுக்காலம் முடிந்ததாக நம்பினோம். பொருளாதாரமும் மெதுவாக உயிர்பெறத் தொடங்கியது,” என்கிறார் அருணின் 30 வயது மருமகன் பிரதீப் தாலே.
கடந்த வருட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் அருணும் ராஜஸ்ரீயும் அவர்களின் நிலத்தில் சோயாபீன் விதைத்தனர். அறுவடைக்காலமான அக்டோபர் மாதத்தில், பருவம் தப்பி பெய்த மழை மொத்த சோயாபீன் பயிரையும் ஒஸ்மானாபாத்தில் அழித்துச் சென்றது. “என்னுடைய மொத்த நிலமும் நீரில் மூழ்கியது,” என்கிறார் ராஜஸ்ரீ. “எங்களின் அறுவடை எதையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நஷ்டத்தின் அளவு என்னவென்பதை அவர் என்னிடம் சொல்லவில்லை. பதற்றத்தைக் கூட்ட வேண்டாமென நினைத்திருக்கலாம்.” கடந்த 4-5 வருடங்களில் சேர்ந்திருக்கும் கடனின் அளவு ரூ.10 லட்சம் என அவர் சொன்னதாக ராஜஸ்ரீ நினைவுகூர்கிறார்.







