2000-ங்களிலிருந்து பிரதான பிரசுர பணி என்பது, விஸ்கி பார்ட்டிகள் பற்றியும் வளர்ப்பு பிராணிகளின் மணம் பற்றியும் எழுதுவதாக மாறியது. சாமானிய மக்களுக்கு பிரச்சினைகளாக இருப்பவற்றை எழுதும் நிலை இருக்கவில்லை. உங்களின் லட்சியங்களுக்கு இயைந்து செயல்பட்டால் ’ஜோல்னா பை’ என்ற (இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு வட இந்தியாவில் கேலியாக சுட்ட பயன்படுத்தப்படும் பெயர்) என்ற பெயர் கிடைக்கும்.
நாட்டில் 69 சதவிகிதம் இடம்பெற்றிருக்கும் - கிட்டத்தட்ட 800 மொழிகளுக்கும் மேலாக பேசும் 833 மில்லியன் மக்கள் - கிராமப்புற இந்தியா பற்றிய செய்திகள், அச்சு செய்திகளின் முதல் பக்கத்தில் 0.67 சதவிகிதம்தான் இடம்பெறுகிறது என்கிறது ஊடக ஆய்வுகள் மையத்தின் 2014ம் ஆண்டு கணக்கெடுப்பு. புது தில்லியை சார்ந்த செய்திகள் மட்டும் தேசிய செய்தித்தாள்களின் பிரதான பக்கத்தில் 66 சதவிகிதம் நிறைந்திருக்கிறது என்கிறது அந்த கணக்கெடுப்பு.
“இதழியலில் இருந்த 35 வருடங்களில், விவசாயம், தொழிலாளர்கள் மற்றும் பல முக்கியமான துறைகள் சார்ந்து எந்த செய்தித்தாளும் தொலைக்காட்சி சேனலும் தனிச் செய்தியாளரை வைத்திருக்கவில்லை என்பதை கண்டறிந்தேன். பாலிவுட், மேட்டுக்குடி நிகழ்வுகள், வணிகம் போன்ற விஷயங்களுக்கு முழு நேர செய்தியாளர்களை கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர் மற்றும் விவசாயத் துறைகளுக்கென முழு நேர செய்தி ஆசிரியர்கள் இல்லை. இந்த நிலைக்கு எதிராக உருவானதுதான் கிராமப்புற இந்தியாவுக்கான மக்களின் பெட்டகம் என்னும் பாரி,” என்கிறார் பலகும்மி சாய்நாத். பாரியின் நிறுவன ஆசிரியரான அவர், 43 வருடங்களாக இந்திய கிராமப்புற செய்திகளை சேகரித்து 60 இதழியல் பரிசுகளை பெற்ற பிரபலமான பத்திரிகையாளர் ஆவார்.
அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகளை கொண்ட பல்லூடக சேமிப்பகமான பாரி, வாழும் பத்திரிகையும் பெட்டகமுமாகும். CounterMedia Trust-ன் முன்னெடுப்பான, இது ஒரு டஜனுக்கும் குறைவான மக்களை கொண்டு டிசம்பர் 2014-ல் உருவாக்கப்பட்டது. கிராமப்புற இதழியல் தளமாக தொடங்கப்பட்ட பாரி, கிராமப்புறத்தை சார்ந்த அரசு ஆவணங்கள் மற்றும் அரிதான ஆவணங்கள் கொண்ட நூலகமும் கிராமக்கலைகளும் கல்விக்கான சாத்தியமும் கொண்ட முன்னெடுப்பாக வளர்ந்தது. மெய்யான களச் செய்திகளை எழுத்து, புகைப்படங்கள், விளக்கப்படங்கள், ஒலி, காணொளி மற்றும் ஆவணப்படங்களின் வாயிலாக பாரி உருவாக்குகிறது. சாமானிய இந்தியர்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய செய்திகளை கொண்ட அவை, தொழிலாளர், வாழ்வாதாரம், கைவினை, நெருக்கடி, கட்டுரைகள், பாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது.












