ஃபரிதாபாத்தின் மங்கார் கிராமத்தில் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த கால்நடை விவசாயியான ரத்தன் சிங், பீடி புகைத்தபடியே தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார். ஆரவல்லியின் மலை உச்சியில் புற்களை மேய்ந்துவிட்டு திரும்பிய ஆடுகளை அவர் தண்ணீர் குடிக்க வருமாறு அழைக்கிறார். “டிர்ர் டிர்ர்,” என்ற அவரது அழைப்பைக் கேட்டவுடன் 45 ஆடுகளும் கூடிவிடுகின்றன.
“ஒவ்வொரு அழைப்பின் குரலும், ஒலியும் வேறுபடுகிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டளையை சொல்கிறது, கால்நடைகளை மேய்க்க இதுபோன்ற டஜன் கணக்கான அழைப்பு ஒலிகள் இருக்கின்றன,” என்கிறார் அவர்.
“ஆவ், ஆவ்,” என்ற சாதாரண அழைப்பு ஆடுகளை தனது எஜமானரிடம் அழைத்து வருகின்றன. “வா இங்கே,”என்ற சாதாரண சொல்தான். பிறகு வரும் “லே லே லே,” ஒலி ஆடுகளை கொஞ்சம் உப்பு தின்ன அழைப்பதற்கு.
“ஆஊலே, ஆஊலே- உஹ் உஹ்” என்ற ஒலி இரண்டு தேவைகளுக்கு பயன்படுகிறது. ஒன்று, மேய்ப்பர் இருக்கிறார் என்பதை மந்தைக்கு உறுதிபடுத்தவும், இன்னொன்று, ஆடுகள் தனியாக இல்லை என்பதை வேட்டைகாரர்களுக்கு உணர்த்தவும்.
65 வயதாகும் ரத்தன் சிங், ஒவ்வொரு ஒலியையும் எழுப்பிக் காட்டி, தொனியும், லயமும் மேய்ப்பனுக்கும், மந்தைக்கும் இடையேயான தொன்றுதொட்ட உறவை எவ்வாறு பராமரிக்கின்றன என விளக்குகிறார்.
ஒல்லியான, உயரமான தேக அமைப்பு கொண்ட சிங், குர்தா பைஜாமாவுடன் உச்சியில் தலைப்பாகை அணிந்துள்ளார். அவரது தோல் ஷூக்கள் கடினமான, கூரான முட்கள், பாறைகள் நிறைந்த மலைப் பாதையிலும் நடக்க உகந்தவை.
சிங் வளமையான பல்லுயிர்களுக்கு அறியப்படும் டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரின் மங்கார் கிராமத்தைச் சேர்ந்தவர்.

















