ஆனால் ஃபகுனிக்கு சுமை இன்னும் அதிகம். வீட்டுவேலையை தாண்டி, குடும்ப வருமானமும் அவர்தான் ஈட்ட வேண்டும். குடும்பத்துக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயமும் பார்க்க வேண்டும். சணல் கயிறும் செய்ய வேண்டும். “குடும்பத்தை நடத்த எல்லா வேலைகளையும் செய்கிறேன். அவர் வெளியே சென்று வேலை பார்க்கும் நிலையில் இல்லை,” என்கிறார் அவர் 58 வயது கணவர் ஷியாம்பிகாரி செளத்ரி குறித்து. பல வருடங்களுக்கு முன்பு போலியோ பாதித்த அவர், குடும்ப சுமையை பகிரும் நிலையில் இல்லை. “தானிய மூட்டை தூக்க வேண்டும் என்றாலும் நான்தான் தூக்க வேண்டும்,” என்கிறார் ஃபகுனி.
ஆனால் தொடர்ந்து மூன்றாவது வருடமாக வயலில் விளைச்சல் இல்லை. சம்பா பருவத்தில் நெல்லும் சணலும் குறுவை பருவத்தில் கோதுமையும் விளைவித்து வந்தார் ஃபகுனி. “இந்த வருடமும் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. இரண்டு வருடங்களாக பஞ்சம். இந்த வருடமும் நிலத்தில் நீர் தங்கவில்லை,” என்கிறார் அவர். “எங்களின் நிலம் மேட்டில் இருக்கிறது. கிணறு ஏதும் இல்லை. அவற்றை கொண்டிருப்பவர்கள் (உயர்சாதி விவசாயிகள்) விவசாயம் செய்ய முடியும். இது மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்தது,” என திரித்துக் கொண்டிருக்கும் கயிறை காட்டுகிறார் அவர்.
சம்பா பயிரான சணல், நெல்லுக்கு முன்பு விதைக்கப்படும். இருமுறை அதை அறுவடை செய்யலாம். பூக்கும் கட்டத்தில் பயிர் இருக்கும் அக்டோபர் மாதத்திலோ பயிர் விளைந்து விதைகள் பழுக்கும் மார்ச் மாதத்திலோ அறுவடை செய்ய முடியும். “விதைகள் பழுத்ததும், சன் சன் சத்தம் கேட்கும். காய்ந்த செடி சத்தம் கொடுக்கும்,” என்கிறார் ஃபகுனி. ஆனால் அவர் மார்ச் மாதம் வரை காத்திருக்க மாட்டார். குறுவை சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்ய, அக்டோபர் மாதத்திலேயே அறுவடை செய்து விடுவார். சணல், இயற்கை உரமாகவும் பயன்படும். “வயலில் கோதுமையோ நெல்லோ விதைத்தால், விளைச்சல் அட்டகாசமாக இருக்கும்,” என்கிறார் அவர்.
மூன்று வருடங்களுக்கு முன் மகன்கள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டதால், ஃபகுனி சணல் விளைவிப்பதை நிறுத்தி விட்டார். “சணல் வளர்க்க செலுத்தப்படும் உழைப்பின் அளவுக்கு, வேறு எந்த பயிருக்கும் உழைப்பு செலுத்தப்படுவதில்லை,” என்கிறார் ஃபகுனி. முதலில், பயிர் வெட்டப்பட்டு, சில நாட்களுக்கு வயலில் காய வைக்கப்படும். காய்ந்த பிறகு, பயிரின் முனைகள் வெட்டப்பட்டு, 50 தண்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டப்படும். ஊரிலுள்ள குளத்துக்கு அவை கொண்டு செல்லப்பட்டு, மென்மையாக ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு முக்கி வைக்கப்படும். “மென்மையானதும், துவைக்கும்போது துணியை கல்லில் அடித்து துவைப்பது போல், அவற்றை நாங்கள் அடிப்போம். எங்களின் கைகள் வலிக்கத் தொடங்கும்,” என விளக்குகிறார் ஃபகுனி.
அத்தனை கடுமையான வேலைக்கு பிறகு, இழை இழுப்போம். “சணலிலிருந்து இழை வெளியே வரும். கொக்கின் இறகு போல வெண்மையாக இருக்கும்,” என்கிறார் அவர். இப்போது அவர் இந்த வேலையை தனியாக செய்ய வேண்டும். “இந்த வேலை பார்க்க ஒருவரை பணிக்கமர்த்தினால், எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது,” என்கிறார் அவர். தொடக்கத்தில், அவரது மகன்கள் வயல் வேலையில் உதவினர். மணமாகி குடும்பங்காகி விட்ட பிறகு, விவசாயத்தை கொண்டு மட்டுமே அனைவரையும் பார்த்துக் கொள்வது இயலாத காரியம் ஆகிவிட்டது. 30 வயதுகளில் இருக்கும் அவரது இரு மகன்களும் மூன்று வருடங்களுக்கு முன்பு, தினக்கூலி வேலை பார்க்க சென்னைக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.