ரிஸ்வானா ஹாஜியைப் பார்த்த மாத்திரத்தில நீங்கள் முதலில் கவனிப்பது அவருடைய அழகான, நீர் நிறைந்த, பாதாம் பழுப்பு நிறக் கண்கள் தான். கண்ணில் தேங்கி இருக்கும் நீரைத் துடைத்து விட்டு, தனது முக்காடுக்குள் உள்ள தலைமுடியை நேர்த்தியாகச் சரிசெய்துகொண்டே என்னிடம் ரகசியமாக “ஆண்களுக்கு தான் கூலிங் கிளாஸ்கள்,” என்கிறார்.
கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு அருகிலுள்ள வயலில் உப்புப் படிகங்களுக்குள் ஒரு ரேக்கை இழுத்துக்கொண்டு செல்லும் ஷெரீஃபை சுட்டிக் காட்டி "என் கணவர் அவற்றை அணிகிறார்," என்கிறார்.
"நீங்கள் ஏன் அணிவதில்லை?" என்றதும், இந்த கேள்வியே விசித்திரமானது என்பது போல சிரிக்கிறார். "இங்கே இருக்கும் பெரியவர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்? எங்கள் சமூகத்தில், பெண்கள் கூலிங் கிளாஸ்கள் அணிவதில்லை," என்று கையசைத்து நாசூக்காக அந்தக் கேள்வியைத் தட்டிக்கழிக்கிறார். மீண்டும் ஒருமுறை தன் கண்ணில் நீரைத் துடைத்துவிட்டு, “எனக்கும் வெட்கமாக இருக்கும்” என்று கூறி, அப்பாவித்தனமாக கூறுகிறார்.
வறண்ட, உப்புக்காற்றின் தாக்கத்தால் கண்களில் தூசியும் உப்புத் துகள்களும் சேர்ந்து, படிப்படியாக கண்களை வறட்சியடைய செய்து சேதப்படுத்தியதன் விளைவாக, ரிஸ்வானாவின் பார்வையில் தொடர்ந்து தேங்கும் நீர், அவரது பார்வைத் திறனுக்கும் தடையாக உள்ளது. இது குஜராத்தின் உப்புப் படுகைத் தொழிலாளர்களான அகாரியாக்களிடையே பொதுவான ஒன்று. கட்ச்சின் சிறிய ரான் பகுதியில் கிட்டத்தட்ட 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உப்பு வயல்களைக் குறிக்கும் குஜராத்தி வார்த்தையான 'அகர்' என்பதிலிருந்து அகாரியா என்ற பெயர் வந்ததுள்ளது. தாழ்வான, கிண்ண வடிவ நிலப்பரப்பான, ரான், பருவமழைக் காலத்தில் ஈரநிலமாக மாறினாலும், கோடை மற்றும் குளிர்காலம் முழுவதும் வறண்டு காணப்படுகிறது.
பாலைவனத்திலிருந்து ஈரநிலமாக மாறும் ரானின் தனித்துவமான நிலப்பரப்பு, பல்லுயிர் வளம் மிக்கதாகிறது. மழைக்காலத்தில் ஃபிளமிங்கோக்கள் மற்றும் பெலிக்கன்கள் போன்ற புலம்பெயரும் பறவைகளுக்கும், ஆண்டு முழுவதும் இங்கு வாழும் கலைமான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் மறிமான்கள் போன்ற விலங்குகளுக்கும் ஒரு புகலிடமாகவும் விளங்குகிறது. வனவிலங்குகளின் வருகை, அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை முன்னறிவிப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், "கட்ச்மா காலே ஷு ஆவ்சே, இ ஆஜேஜ் தேகே" [கட்ச்சில், நாளைய தினத்தை இன்றே காண முடியும்] என்ற ஒரு பொதுவான பழமொழி உள்ளது.
தண்ணீர் வடிந்தவுடன், அகாரியாக்கள் இங்கு வந்து, கூடாரங்களை அமைத்து, எட்டு மாதங்கள் தங்கி, நிலத்தடி உவர்நீரை உப்பாக மாற்றுகிறார்கள். இந்தியாவின் 75 சதவீதத்திற்கும் அதிகமான உப்பை இங்கு உற்பத்தி செய்கிறார்கள்.
ரான், நேர்கோடுகளின் உலகம். உப்புப் படுகைகளின் வெண்மையான கட்டங்கள், சதுர வடிவ சூரிய மின் தகடுகள் மற்றும் நிலத்தின் மீது சீராகப் அமைக்கப்பட்ட செவ்வகங்கள் ஆகியவை இந்தப் பரந்த உப்புப் படுகைகளின் கொடூர தன்மைக்கு மேலும் வலு சேர்க்கின்றன. காலை 10 மணிக்கு, ரானில் சூரியன் உருகிய கோளம் போல சுட்டெரித்து, எல்லாவற்றையும் தாங்க முடியாத வெண் ஒளியால் மூடுகிறது. வேற்றுலக நிலப்பரப்பு போல காட்சியளிக்கும் இது, அடிவானம் வரை நீளும் தடித்த உப்புப் படலத்துடன் காணப்படுகிறது. கீழேயும் மேலேயும் உள்ள வெண்மை, கொடூர பிரகாசத்தில் ஒன்றிணைகிறது. வெப்பம் எல்லாவற்றிலிருந்தும் நீரை உறிஞ்சுகிறது: உதடுகள் வெடிக்கின்றன, தாகத்தில் தொண்டைகள் எரிகின்றன, கண்களில் எப்போதும் நீர்வடிகிறது, மேலும் வறண்ட பூமியைப் போலவே குதிகால்களும் வலிமிகுந்த பிளவுகளைத் தாங்குகின்றன.














