“எங்கள் தலைமுறை பெண்கள் படித்திருந்தால், நிறைய விஷயங்கள் மாறியிருக்கும்,” என்கிறார் சுர்ஜீத் கவுர், கிஷான்கர் சேதா சிங் வாலா வீட்டு வராண்டாவில் அமர்ந்தபடி. அவரின் பேத்தி மற்றும் பேரன் ஆகியோர் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கின்றனர். 5ம் வகுப்பிலிருந்து படிப்பு நிறுத்தப்பட்டபோது, அவருக்கு கிட்டத்தட்ட அவர்களின் வயதுதான்.
“கல்வி, ஒரு மனிதரின் மூன்றாம் கண்ணை திறந்து விடும்,” என்கிறார் 63 வயதாகும் அவர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் 75 வயது ஜஸ்விந்தர் கவுர் ஆமோதித்து தலையசைக்கிறார். “பெண்கள் வெளியே செல்கையில், உலகை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்,” என்கிறார் அவர்.
கல்வியை முடிக்க முடியாத நிலையிலிருந்த அவர்களுக்கு இன்னொரு சம்பவம் பெரிய அளவில் கல்வி புகட்டியதாக அவர்கள் கூறுகிறார்கள். 2020-21ல் 13 மாதங்களாக நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் போராட்டத்தில், கிராமத்திலிருந்து கலந்து கொண்ட 16 பெண்களில் சுர்ஜீத்தும் ஜஸ்விந்தரும் அடக்கம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருட காலமாக தில்லி எல்லையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அவரைப் போன்ற லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள.
இச்செய்தியாளர் கிஷான்கர் சேதா சிங் வாலாவுக்கு மே 2024 அன்று சென்றபோது, பஞ்சாபில் உள்ள பல கிராமங்களை போல, இக்கிராமமும் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஜூன் 1ம் தேதி தேர்தலுக்கும் கிராம மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். ஒன்றிய ஆளுங்கட்சியின் விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளால், போராட்டங்கள் மூண்டு ஏற்கனவே சூழல் சூடாக இருந்தது.
“பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்த வேளாண் சட்டங்களை மீண்டும் அவர்கள் கொண்டு வருவார்கள்,” என்கிறார் 60 வயது ஜர்னைல் கவுர். கிஷான்கர் சேதா சிங் வாலாவில் அவரது குடும்பத்துக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. “புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்.”
(ஷிரோமணி அகாலிதலத்தின் ஹர்சிம்ராட் கவுர் பாதல், 2024 தேர்தலில் பதிண்டா தொகுதியில் வெற்றி பெற்றார். முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.)
















