பொதுத்துறை நிறுவனமான ஹரியானா சாலை போக்குவரத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சொகுசான ஓய்வு வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். “ஆனால் எனக்குள் ஆர்வம் இருந்தது,” என்கிறார் 73 வயதாகும் அவர்.
அந்த ஆர்வம்தான், தந்தை குகான் ராம் யாதவ் பால்யகாலத்தில் அவருக்குக் கற்றுக் கொடுத்த கயிற்றுக் கட்டில் மற்றும் சணல் முக்காலி செய்யும் கலையை செய்ய வைத்தது.
அவரின் கற்றல் அரை நூற்றாண்டுக்கு முன் தொடங்கியது. அப்போது அவருக்கு 15 வயது. மூன்று சகோதரர்களுடன் அமர்ந்து, தந்தை வீட்டுக்கு என செய்யும் கயிற்றுக்கட்டில்களை வேடிக்கை பார்த்திருக்கிறார். அவரின் தந்தைக்கு 125 ஏக்கர் நிலம் இருக்கிறது. கோடை மாதங்களை கட்டில்கள் செய்ய செலவழிக்கீறார். அதற்கு பிறகு கோதுமை அறுவடைக்காலம். கையால் செய்யப்பட்ட சணல், பருத்தி கயிறு மற்றும் குங்கிலிய மரம் மற்றும் ஷீஷ மரம் ஆகியவற்றை பயன்படுத்தினார். மாடுகளும் மற்றவர்களும் அதிக நேரம் இருக்கும் பைதக் என்கிற திறந்த அறைதான் அவர் பணி செய்யும் அறை.
பகத் ராம் தன் தந்தையை ஆகச் சிறந்த வல்லுநர் என நினைவுகூருகிறார். கருவிகளை கவனமாக தேர்ந்தெடுப்பார் அவர். “என் தந்தை கயிற்றுக் கட்டில் செய்ய கற்கும்படி என்னை ஊக்குவித்தார். “வா, இதைக் கற்றுக் கொள். பின்னால் இது உனக்கு உதவும்,” என்பார் அவர்,” என நினைவுகூருகிறார் பகத் ராம்.
ஆனால் சிறுவர்களாக அவர்கள், அந்த வேலை கடினம் என்பதால், அதைக் கேட்காமல் ஓடிச் சென்று கால்பந்து, ஹாக்கி அல்லது கபடி விளையாடுவார்கள். “தந்தை எங்களை திட்டுவார். அடிக்கவும் செய்வார். ஆனால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம்,” என்கிறார் அவர். “வேலை பெறுவதில்தான் அதிக ஆர்வம் காட்டினோம். தந்தை மீதான பயத்தால்தான் இந்த திறனை கற்றுக் கொண்டோம். செய்ய முடியாமல் தடைபட்டு நிற்கும்போது வடிவத்தை உருவாக்க கயிற்றை எப்படி நகர்த்த வேண்டுமென அவரிடம் கேட்போம்.”
























