அமர்ஜித் கெளர் அசையாமல் நிற்கிறார். அவர் தலையில் வைக்க முயலும் உலோக பாத்திரம் நிலைபெறாமல் சில கணங்களுக்கு இருந்தது. பிறகு மெல்ல, சிறு சிறு அடிகள் வைத்து தள்ளாடியபடி, மாட்டுத்தொழுவத்தில் அள்ளிய சாணத்தை கொட்ட சாணக் குவியலுக்கு செல்கிறார். 10-12 கிலோவுக்கு பாத்திரம் முழுமையாக நிரம்பியிருந்தும் எளிதாக நடந்து செல்ல முடிந்த நாட்கள் இருந்தன. ஆனால் 72 வயதில் அது அவருக்கு சிரமம்தான். பாத்திரத்தில் இருக்கும் சுமையைக் காட்டிலும் அவரின் மனதில் இருக்கும் துயரச் சுமைதான் அவரை தள்ளாட வைக்கிறது.
ஓர் எளிய கேள்வி, 24 வருட கால நினைவுகளுக்கு சுனாமி போல் அமர்ஜித்தை இழுத்து சென்றது. “அவர்கள் வந்து, ‘உங்கள் மகன் பட்டி திருப்பத்துக்கருகே இறந்துவிட்டார்’ எனக் கூறினார்கள்,” என்கிறார் அவர் சாணத்தை அள்ள அமர்ந்தபடி. அவரின் கைகள் இயந்திரகதியில் இயங்க, தரையில் குத்த வைத்து அமருகையில் அவரின் மூட்டுகள் சத்தமிடுகின்றன. “அவன் ரிக்ஷா இழுத்துக் கொண்டிருந்தான். வயது 18-தான்.” ஐந்து வருடம் கழித்து இரண்டாம் மகனையும் 21 வயதில் அவர் பறிகொடுத்தார்.
மகன்களுக்கு ஆறு மற்றும் நான்கு வயதுகளாக இருக்கும்போது அவர்களின் தந்தை 36 வருடங்களுக்கு முன் மது பழக்கத்தால் இறந்தார். மணம் முடித்ததிலிருந்து அமர்ஜித் செய்து வரும் மாட்டு சாணம் அள்ளும் வேலை இல்லையெனில் இரு மகன்களையும் இரு மகள்களையும் (மணமாகி விட்டது) அவர் வளர்த்திருக்க முடியாது. வெறுங்கைகளால் சாணத்தை அள்ளி பாத்திரத்தில் போடுகிறார். ஒரு நீண்ட மூச்செறிந்து பாத்திரத்தை தலையில் தூக்கி வைத்து, தள்ளாட்டத்தை நிறுத்தி, 100 மீட்டர் தொலைவில் இருக்கும் சாணக் குவியலை நோக்கி செல்கிறார். காலையிலிருந்து இது 20வது தடவை. பஞ்சாபில் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மெஹ்ரே சிக் சமூகத்தை சேர்ந்தவர் அவர். நிலமற்ற தலித்தான அமர்ஜித், பிழைப்புக்காக ஊரின் ஏழு வீடுகளில் மாட்டுச்சாணம் அள்ளுகிறார்.
“சாணம் அள்ளும்போது அவ்வப்போது மாடுகள் என் மீது சிறுநீர் கழிந்துவிடுவதால் இந்த பிளாஸ்டிக் பையை என் தலையில் கட்டியிருக்கிறேன். தினமும் தலை கழுவ சோப்பும் ஷாம்புவும் வாங்க எனக்கு வழியில்லை.” கையில் பிடித்திருக்கும் கறுப்பு நிற பையை அமர்ஜித் காட்டுகிறார். அந்த நாளின் முதல் வீட்டில் அவர் வேலை பார்த்து முடித்திருக்கிறார். 10 மாடுகளை கொண்ட நிலவுடமை விவசாயியின் வீடு அது. இனி அவர் இன்னொரு வீட்டுக்கு நடந்து செல்வார்.





