லிம்ப்டி நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் செல்லும் சாலை ஒன்று 10-12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மோடா டிம்ப்லா கிராமத்துக்கு அழைத்து செல்கிறது. கிராமத்தின் முனையில், தலித் நெசவாளர் சமூகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வங்கர்வாஸ் என்கிற இடம் பிருக்கிறது. கட்-கட்… கட்-கட், என தாளகதியில் இயங்கும் தறிக்கட்டைகளின் சத்தம், சில குடிசைகளும் பழைய பாணி ஓட்டு வீடுகளும் இருக்கும் குறுகிய சந்துகளுக்குள் எதிரொலிக்கிறது. அவ்வப்போது எழும் ஒன்றிரண்டு மனிதக் குரல்கள், தறியின் தாளத்தை குலைக்கிறது. கவனமாக கேளுங்கள், உழைப்பின் சத்தம் கூட உங்களுக்கு கேட்கும். இன்னும் கூர்ந்து கேளுங்கள், நுட்பமான வடிவத்தை நெய்வதிலுள்ள துயரத்தையும் ரேகா பென் வகேலாவின் வாழ்க்கைக் கதைக்கான முத்தாய்ப்பாக நீங்கள் கேட்க முடியும்.
“எட்டாம் வகுப்புக்கு மூன்று மாதங்கள்தான் சென்றேன். லிம்ப்டியிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். முதல் பள்ளித் தேர்வுக்கு பிறகு வீட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான் நான் மேலே படிக்கப் போவதில்லை என என் அம்மா கூறினார். என் அண்ணன் கோபால் பாய்க்கு உதவி தேவைப்பட்டது. பணம் ஈட்ட வேண்டி, அவர் கல்லூரி படிப்பு முடியும் முன்பே படிப்பை நிறுத்தி விட்டார். என் இரு சகோதரர்களின் படிப்புக்கு செலவு செய்யுமளவுக்கு எங்களின் குடும்பத்துக்கு பணம் இருந்ததில்லை. அப்படிதான் நான் படோலா வேலையைத் தொடங்கினேன்.” ரேகா பென்னின் வார்த்தைகள் வெளிப்படையாகவும் கூர்மையானவையாகவும் இருந்தன. வறுமை தரும் பண்புகள் அவை. 40 வயதுகளில் இருக்கும் அவர், குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள மோடா டிம்ப்லாவின் திறன் வாய்ந்த நெசவாளர் ஆவார்.
“மது, சூதாட்டம், பான் பாக்கு, புகையிலை போன்ற பழக்கங்களை கொண்டவர் என் கணவர்,” எனத் தொடங்குகிறார் அவர், திருமணத்துக்கு பின்னான அவரது வாழ்க்கையின் கதையை. சந்தோஷமற்ற வாழ்க்கை. கணவரை விட்டு, சொந்த வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நிலை என்றாலும் மீண்டும் கணவரிடம் சென்று சேரவே அழுத்தங்கள் கொடுக்கப்படும். பரிதாபகரமான நிலைதான். எனினும் அவர் தாக்குப்பிடித்தார். “அவர் நல்லவர் இல்லை,” என இப்போது சொல்கிறார் அவர்.
“சில நேரங்களில் என்னை போட்டு அடிப்பார். கர்ப்ப காலத்தில் கூட அடித்திருக்கிறார்,” என்கிறார் அவர். காயங்கள் இன்னும் காயாமல் இருப்பதை அவரது குரலில் உணரலாம். “பெண் குழந்தை பிறந்த பிறகுதான் அவரின் கள்ளத்தொடர்பு எனக்கு தெரிய வந்தது. அப்படியே ஒரு வருடம் ஓடியது. அப்போதுதான் கோபால் பாய் விபத்தில் இறந்து (2010-ல்) போனார். அவரின் படோலா வேலை எல்லாம் முடங்கியிருந்தது. கோபால் பாய், மூலப்பொருள் கொடுத்த வணிகருக்கு கடன் அடைக்க வேண்டியிருந்தது. எனவே நான் (பெற்றோர் வீட்டில்) தங்கியிருந்து அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவரின் வேலை செய்தேன். அதற்கு பிறகு என் கணவர் வந்து என்னை அழைத்து சென்றேர்,” என்கிறார் அவர்.
இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்து தான் சந்தோஷமாக இருப்பதாக, குழந்தையைப் பார்த்துக் கொண்டு, தன்னைத் தானே அவர் ஏமாற்றிக் கொண்டார். ”இறுதியில், என் மகளுக்கு வயது நான்கரை ஆனபோது, சித்ரவதையை சகிக்கும் தன்மையை இழந்து நான் கிளம்பி விட்டேன்,” என்கிறார் ரேகா பென். பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு கற்றுக் கொண்ட படோலா நெய்யும் திறன் அவருக்கு உதவியது. வறுமை கொடுத்த கூர் முனைகளை சரிப்படுத்த அது உதவியது. புது வாழ்க்கையையும் அவருக்கு உருவாக்கி தந்தது. வலிமையான வாழ்க்கை.


















