மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் போது தான், அவர் பெயரில் வங்கிக் கணக்கு கூட இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆதிவாசி உண்டுறைப் பள்ளியில் (residential school) ஆசிரியையாக பணியாற்றி வந்த, அவரது மனைவி அவருக்கு 15,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். மேலும் அவரது கட்சித் தொண்டர்கள் தங்களால் இயன்றதை வழங்கியதில், தேர்தல் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தேவையான 52,000 ரூபாயை திரட்ட முடிந்தது.
வினோத் நிகோலேவுக்கு எதிரான சூழல் மிகவும் மோசம். அவரை எதிர்த்து போட்டியிடுபவர், சட்டமன்ற உறுப்பினரான தனாரே பாஸ்கல் ஜன்யா. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் 2014-ஆம் ஆண்டு தஹானு தொகுதியில் 16,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். அக்கட்சி அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 82 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிட்டதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது, செலவிட பணம் இல்லாதது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. நிகோலே சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
"என் உறவுமுறைச் சகோதரர் எனக்கு 70,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்தார். தேர்தலுக்கு முன்பு என்னிடம் இருந்த ஒரே ரொக்கப் பணம் அந்த 70,000 ரூபாய் மட்டுமே," என்று பால்ஹர் மாவட்டத்தின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான தஹானு நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி, அவர் ஒரு மெல்லிய புன்னகையுடன் கூறுகிறார்.
இது, இன்று நடைமுறையில் இல்லாத ஒரு இந்தியாவின் கதையைப் போலத் தோன்றலாம். ஆனால் இது மிகச் சமீபத்தில் 2019-ஆம் ஆண்டு தான் நிகழ்ந்தது. 2024ம் ஆண்டும் தொடர்ந்தது. ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்துகொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், பணம் இல்லாமல் அரசியலில் வெற்றி பெறவே முடியாது என தோன்றிய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 48 வயது நிகோலே, தற்போது தனது இரண்டாவது பதவிக்காலத்தை இயல்பாகத் தொடர்கிறார். அதுவும், சட்டமன்ற உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக இருக்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்ந்திருக்கிறது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) அடிப்படையில், மகாராஷ்டிரா இந்தியாவின் மிகப் பணக்கார மாநிலமாகத் திகழ்கிறது.
தஹானு நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகி கிராமத்தில் செங்கல் சூளைத் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்த நிக்கோல், மகாராஷ்டிராவின் மிகவும் ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மகாராஷ்டிரா, நாட்டிலேயே அதிக தேர்தல் செலவினங்களைக் கொண்ட மாநிலமாகப் பரவலாக அறியப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக நிக்கோலால் பணம் விநியோகிக்கவோ, அல்லது தனது செயல்திட்டங்களை முன்னெடுக்க ஒரு பெரிய சமூக ஊடகக் குழுவை நியமிக்கவோ இயலாத நிலை. களத்தில் இறங்கி, அடிமட்ட இயக்கங்களில் பங்கேற்று, சாதாரண மக்கள், குறிப்பாக பழங்குடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடியவராக இருந்ததே அவரது மூலதனமானது.









