54 வயது கிரன் கஹாலாவுக்கும் அவரை போன்ற பல பழங்குடி விவசாயிகளுக்கும் இந்த உணர்வு புதிதில்லை.
ஜனவரி 19, 2026 அன்று பல்கார் மாவட்ட தொல்ஹாரி புத்ருக் கிராமத்தில் சிவப்பு டி ஷர்ட்டும் துண்டும் அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்தார் அவர். பிற பழங்குடி விவசாயிகளுடன் காத்திருந்த டெம்போவில் ஏறி சரோதிக்கு கிளம்பினார். மகாராஷ்ட்ராவின் அனைத்து இந்திய விவசாய சங்கம் (AIKS) ஒருங்கிணைத்த மற்றுமோர் பெரும் பேரணியின் தொடக்கம் அது.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இங்கு இருக்கின்றனர். 50,000-க்கும் மேல் இருக்கலாம் என்கின்றன ஊடக செய்திகளும் AIKS கணக்குகளும். நிலவுரிமை கோரியும் MGNREGA திட்டம் மீண்டும் செயல்படுத்தக் கோரியும் வாதவன் துறைமுக திட்ட நிறுத்தம், குடிநீர் தேவை, நீர்ப்பாசன வசதி முதலியவற்றை கோரியும் ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பயணத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.











