அவர் அடைபட்டிருக்கும் பழைய மருத்துவமனையின் படுக்கையை பார்த்திருக்கும் உறுதியற்ற சக்கர நாற்காலியை இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொள்கிறார். கூரையிலிருந்து வரும் மரத்தூணில் தொங்கும் ஒரு துணியை அவரின் இடது கை பிடிக்கிறது. முறுக்கி தன் உடலை படுக்கையிலிருந்து வலது கை கொண்டு தள்ளி, சக்கர நாற்காலியில் அவர் அமர்கிறார். அடுத்து இரண்டு கைகளையும் கொண்டு ஒவ்வொரு காலையும் இழுத்து, பாதங்களை நாற்காலியின் பாதத் தட்டில் வைக்கிறார். இவற்றை அவர் செய்யும் நுட்பமே, ஆயிரக்கணக்கான முறை இந்த வேலையை அவர் செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. பிலிகிரிரங்கானா மலைகளின் காடுகளிலுள்ள உயரமான மரங்களை ஒருகாலத்தில் அவர் ஏறிய அதே லாவகம்!


Chamarajanagar, Karnataka
|THU, MAR 19, 2026
பிஆர் மலைகளின் இறகு உடைந்த பறவை
கர்நாடகாவின் பிஆர் மலைகளில் தேனெடுக்கும் சோளிகர் பழங்குடி ஒருவர் கோர விபத்து ஒன்றுக்கு பிறகு, தன் பாடலை தேடிக் கொண்டிருக்கிறார்
Author
Editor
Photo Editor
Translator

M. Palani Kumar
“மாலை ஆறு மணி இருக்கும். மழை பெய்து கொண்டிருந்தது. மரம் வழுக்கியது. தான்றி மரத்தின் மீது பெரிய தேன் கூடு இருந்தது. அதை வெட்ட, பக்கத்தில் இருந்த வேங்கை மரத்தில் ஏறினேன். இவை பெரிய மரங்கள். உயரமானவை.” அருண் குமார் குறிப்பிடும் மரங்கள் 130 அடி உயரம் வளருபவை.
“கையில் புகை தடியை வைத்திருந்தபோதும் தேனீக்கள் என்னை கொட்டின. வேகமாக கீழே இறங்க விரும்பினேன். திடுமென கால் தவறி கீழே, 25 அடிக்கு விழுந்தேன்.” கடைசியாக இரண்டு கால்களில் அவர் நின்ற அந்த மே 12, 2024 பற்றி பேசுகிறார் அவர்.
8X10 அடி தகரக் கூரை வசிப்படத்தின் சிறு கதவின் வழியாக சக்கர நாற்காலியை செலுத்துகின்றன அருணின் கைகள். உள்ளே இருக்கும் இருட்டுக்கு நடுவே அந்த சிறு வழியாக வெளிச்சம் வருகிறது. குடும்பத்தின் மற்றவர்கள் வசிக்கும் செங்கல் மண் வீட்டின் ஒரு பக்க மறைவிலிருந்து அது வருகிறது. மறுபக்கத்தில் அவரின் தந்தை வளர்க்கும் சில புறாக்கள் வசிக்கும் புறாக்கூடு இருக்கிறது.

Pratishtha Pandya

M. Palani Kumar
“உதவ யாரும் இல்லை. காலையில் இந்த அறையில் இருந்து என்னை நானே வெளியேற்றிக் கொண்டு வெயிலில் அமர்ந்திருப்பேன்,” என்கிறார் 24 வயது நிறைந்த அவர், அறைக்கு வெளியே இருக்கும் சிறு வெளியின் பக்கம் திரும்பியபடி.
வழக்கமாக வருடத்தின் இந்த நேரத்தில், தேயிலைச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் வரவென மரங்களின் கிளைகளை வெட்டி குடும்பத்துக்கு அருண் உதவுவார். இந்த வருடம் அவர்கள் தினக்கூலி கொடுத்து அந்த வேலை செய்ய வேண்டியிருக்கிறது. செலவு அதிகம் என்பதால், மரங்கள் தடையின்றி வளர்கின்றன.
சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்துக்கு அருண் நகர்கிறார்.
“தேன் எடுத்து வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான ஐந்தாறு வாரங்கள்தான் தேன் எடுக்கும் காலம்,” என்கிறார் அவர். “கோடைகாலத்தில் வெளியே வேலை கிடைக்காது. வீட்டிலும் பணப்பிரச்சினை இருக்கும். எனவே நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து, சிறு வருமானத்துக்காக இதை செய்யத் தொடங்கினோம்.” சிறு வருமானம் குடும்பம் ஓட்ட உதவியது.

Courtesy: Arun
“நண்பர்களோ அதிகம் நேரம் செலவழித்தாலும் வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதை கவனித்ததில்லை. 7ம் வகுப்பில் படிப்பை நிறுத்தினேன்,” என்கிறார் அருண். “பிற சிறுவர்களை பார்த்து மரமேறி தேன் எடுக்க நான் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. நாளடைவில் நுட்பம் கைவந்துவிட்டது. தேன் எடுக்கும் பாடலை பாடிக் கொண்டுதான் மக்கள் மரங்களுக்கு செல்வார்கள். அந்த பாடலை நான் கற்றுக்கொள்ளவே இல்லை.” தேன் எடுப்பதில் திறன் படைத்தவர்கள் சோளிகர்கள். ஆனால் அருணின் தந்தையான 53 வயது சன்னாரங்கே கெளடாவுக்கு தெரியாது.
கெளடா ஒரு விவசாயியாகவும் செயற்பாட்டாளராகவும் சமாராஜநகர் மாவட்டத்தில் இருந்தார். 1970-களில் அரசாங்கம், சோளிகர்களை வெட்டி எரித்து செய்யும் சாகுபடியை கைவிட்டுவிட்டு காடுகளுக்குள் இருந்த பொடுகளில் (சிறு வசிப்பிடங்கள்) தங்க நிர்பந்தித்தது. ஏலந்தூர் தாலுகாவில் முட்டுகாட்காட்டுவில் கொடுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் அவரின் குடும்பம் 1974ம் ஆண்டில் இருந்து விவசாயம் செய்து வந்தது.

Courtesy: Arun
“அவரைக்காய், சோளம், துவரை, ராகி போன்றவற்றை விதைத்தோம். ஆனால் யானைகளும் பன்றிகளும் பயிர்களை சூறையாடின. எனவே 1990-களில் தேயிலை விவசாயத்துக்கு மாறினோம்,” என்கிறார் கெளடா.
பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு, தந்தைக்கு விவசாயத்திலும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதிலும், களை எடுப்பதிலும் பழம் பறிப்பதிலும் அருண் உதவினார். பிற சிறு வேலைகளை செய்து வருமானம் ஈட்ட முயன்றார். “என்ன வேலை கிடைத்தாலும் செய்தேன். மரம் வெட்டுவது, விறகு வெட்டுவது, தேன் எடுப்பது போன்ற வேலைகள். சில நாட்களில் 1,000 ரூபாய் கூட கிடைக்கும். ஆனால் வருமானம் நிலையாக இருக்காது.”
“இளம் சோளிகர்களுக்கு வெளியே வேலை கிடைப்பதில்லை. வேறு திறன்களும் அவருக்கு கிடையாது. கல்வியும் வேலைகளை உறுதி செய்வதில்லை,” என்கிறார் செயற்பாட்டாளரும் சமூகத்தின் முதல் ஆய்வறிஞருமான டாக்டர் சி.மாதேகெளடா.
18 வயதில் அருண் புலம்பெயரத் தொடங்கினார். முதலில் கட்டுமானத் தொழிலாளராக பெங்களூருக்கு சென்றார். பிறகு கர்நாடகா மற்றும் கேரளாவிலுள்ள தேயிலை மற்றும் மிளகு தோட்டங்களுக்கு சென்றார். அறுவடை முடிந்து மார்ச்-ஏப்ரலில் ஊர் திரும்புவார்.
இந்த மாதங்களில்தான் இந்த ஊரில் தேன் எடுக்கப்படுகிறது.

M. Palani Kumar

M. Palani Kumar
“எல்லா முறையும் தேன் கூடுகள் கிடைக்காது. எல்லா நாட்களும் காட்டுக்கு செல்லவும் முடியாது. மாதத்தில் நான்கைந்து முறைதான் செல்வோம். காலையில் கிளம்பி 15 கிமீ சுற்றளவில் சென்று தேன் கூடுகள் இருக்கிறன்றனவா எனப் பார்த்து விட்டு வீடு திரும்பி விடுவோம். பிறகு மாலையில் தேன் சேகரிக்க கிளம்புவோம். ஆனால் எப்போதும் இரண்டு-மூன்று நாட்களுக்கு சோறு கட்டிக் கொண்டு காட்டுக்குள்ளே வரை செல்வோம்,” என்கிறார் அருண்.
தேன் கூடுகளின் எண்ணிக்கை மட்டும் அளவை சார்ந்துதான் அவர்களின் வருமானம் இருக்கிறது. ஒருமுறை சென்றால் 60-70 கிலோ தேனை அவர்கள் சேகரிப்பார்கள். வீடு வந்ததும் அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி கேன்களில் ஊற்றுவார்கள். அவற்றை கிலோ 200 அல்லது 300 ரூபாய் விலையில் ஏஜெண்டுக்கு விற்று, கிடைப்பதை சமமாக பிரித்துக் கொள்வார்கள்.
“மூன்று நண்பர்கள் என்னுடன் இருந்தனர்.” துயர்மிகு நாளை நினைவுகூருகிறார் அருண். “விழுந்தபிறகு எழ முயன்றேன். ஆனால் முதுகு பக்கமாக விழுந்ததால் வலி கடுமையாக இருந்தது. எலும்புகள் முறிந்திருந்தன. என்னால் அசைய முடியவில்லை. இரவாக இருந்ததால் என் நண்பர்கள் பல மணி நேரங்கள் என்னுடன் இருந்து, நெருப்பு மூட்டி விலங்குகளிடமிருந்து என்னை காத்தனர். காலையில், கிராம மக்கள் வந்தனர். பிறகு ஓர் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டேன்.” அது அருகில் இருந்த விவேகானந்தா பழங்குடி மருத்துவ மையம்தான் (VTHC).

M. Palani Kumar
“அந்த நாளின் காலை தொடங்கி, வருடக்கணக்கில் மருத்துவமனை சென்று கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அவரின் தந்தை. இடுப்புக்கு கீழ் அருணுக்கு செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரின் முதுகெலும்பு கடும் பாதிப்படைந்திருந்தது. “எங்களை சாம்ராஜ் நகர் மருத்துவ அறிவியல் மையத்துக்கு (CIMS) அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள், அவரின் எலும்புகள் முறிந்திருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். ஒரு நரம்பும் வெட்டுப்பட்டிருந்தது. அறிக்கைகளை மருத்துவமனை வைத்துக் கொண்டது. மருந்துகளும் ஊசிகளும் எங்களிடம் கொடுக்கப்பட்டன,” என்கிறார் எம். சன்னாரங்கே கெளடா.
முறிந்த முதுகெலும்புக்கான அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, VTHC-க்கு திரும்பினார் அருண். அங்கு அவரை பராமரிக்கவிருந்த அருணின் இளம் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு பணியாளர்கள் பயிற்சி அளித்தனர்.

M. Palani Kumar

M. Palani Kumar
மணம் முடித்த ஆறு மாதங்களில் கொடும் விபத்து நடந்திருந்தது. “அவரின் மனைவி அவரை முழுமையாக பராமரித்து…” என்னும் 45 வயது தாய் மசானம்மா, வாக்கியத்தை முடிக்கவில்லை. “காட்டில் நாங்கள் முழு நாளும் இருப்போம். அவர் வீட்டில் இருப்பார். செல்பேசி பார்த்துக் கொண்டிருப்பார். நண்பர்களும் முன்போல அவரை சந்திக்க வருவதில்லை. அலுப்பாக உணரும் அவர், கையறுநிலையில் இருக்கிறார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கவலைப்படுவதை தவிர,” என்கிறார் அவர்.
”பெற்றொரிடம் மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை. என்னிடம் திரும்ப என்னால் நடக்க முடியும் எனக் கூறினார்கள். முயன்று நடக்கும்படி சொன்னார்கள். ஆனால் உதவி ஏதும் இல்லாததால் நான் முயலவில்லை,” என்கிறார் அருண். அவரின் கை, சக்கர நாற்காலியில் தொங்கிக் கொண்டிருக்கும் மூத்திரப் பையின் குழாயை வருடிக் கொண்டிருக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுநீர் கழிப்பதில் அருணுக்கு சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்கள் முயற்சி பலன் பெறவில்லை. அடிவயிற்றில் வலி நிறைந்த ஒரு வீக்கம் அருணுக்கு இருக்கிறது. ஜூன் 2024-ல் மீண்டும் மருத்துவமனைக்கு பலமுறை சென்றனர். முதலில் CIMS, பிறகு மைசூரை சேர்ந்த கே.ஆர்.மருத்துவமனை. அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

M. Palani Kumar

Pratishtha Pandya
பிரச்சினை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்தது. ஒவ்வொருமுறையும் மைசூரில் சில நாட்களுக்கு அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிக்கடி தொற்று ஏற்பட்டதால் ஆண்டிபயாடிக் சிகிச்சை அவருக்கு கொடுக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் அவரின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பதற்றத்துக்கான மருந்து தேவைப்படும். பராமரிப்பு இன்னும் சிக்கலாகும்.
“சிறுநீர் குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டதும், மைசூருக்கு அதிக முறை நாங்கள் செல்ல வேண்டியிருந்தது,” என்கிறார் அருணின் தந்தை. “அரசு மருத்துவமனை சிகிச்சை இலவசம்தான். ஆனால் போக்குவரத்து செலவு சாமராஜ்நகர் செல்ல 3000 ரூபாயும் மைசூர் செல்ல 5,000 ரூபாயும் ஆகிறது. அதில்லாமல் உணவு மற்றும் வசிப்பிட செலவு இருக்கிறது. ஒவ்வொரு முறை சென்று வர குறைந்தபட்சம் 10,000 ரூபாய் ஆகிவிடுகிறது.”
அருணை போன்றோருக்கு அரசுதவி அதிகம் இல்லை என்கிறார் டாக்டர் மாதேகெளடா. “புலி தாக்கி இறப்பு, யானை தாக்குதல் போன்றவற்றுக்கு 20 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் உண்டு. பெரும் பரப்பளவு பல்நோக்கு வசிப்பிடங்களும் கூட தீவிர விபத்துகளுக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன. ஆனால் தேன் எடுக்க சென்று மரத்தில் இருந்து விழுந்தால் காப்பீடு கிடையாது.” இந்தியா முழுவதும் உள்ள தேன் சேகரிக்கும் பழங்குடியினர் இப்பிரச்சினையை சந்திக்கின்றனர். "அருணுக்கு முன்பு, கெரடிம்பா பகுதியில் ஒரு சிறுவன் மரத்திலிருந்து விழுந்து காலை இழந்தான்.” கூட்டுறவு சொசைட்டி சில நேரங்களில் 2000-3000 ரூபாயை நிவாரணமாக வழங்கும். ஆனால் அது போதுமானதாக இருப்பதில்லை.

Pratishtha Pandya
மருத்துவர்கள் “அருணின் பிரச்சினையில் ஒரு பகுதியைதான் சரிசெய்ய முடிந்தது,” என்கிறார் அவரின் தந்தை. “பெரிய மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற வேண்டுமென கே.ஆர்.மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். எங்களிடம் பணம் இல்லை. இப்போது ஒரு (VTHC) மருத்துவர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணமின்றி மூத்திர குழாயை மாற்ற வருகிறார். தீவிர அடைப்பு ஏற்பட்டால், நாங்கள் சாமாராஜாநகருக்கு செல்ல வேண்டும்.”
அருணின் நாட்கள் வழக்கத்தை இழந்துவிட்டன.
“மெயின் கேட் வரை சக்கர நாற்காலியை இழுத்து வந்து வெறுமனே காலை முழுக்க அமர்ந்திருப்பேன். அல்லது வெயிலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பேன். பிறகு அறைக்கு செல்வேன். முன்பு அனைவரும் ஒரே வீட்டில் இருந்தோம். அடிபட்ட பிறகு, யாரும் இல்லை. செல்பேசியில் எதையேனும் பார்த்துக் கொண்டிருப்பேன். இந்த கொட்டகை முன்பே கட்டப்பட்டது. அங்கிங்கு செல்ல எளிதாக இருக்குமென இங்கு வந்தேன். ஆனால் உதவ யாரும் இல்லை. நான் இருக்கும் நிலை எனக்கு பிடிக்கவில்லை.
”என் மனைவியும் என்னை விட்டு சென்றுவிட்டார்,” என்கிறார் அருண். “என்னை அவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஆனால் நிலை மாறவில்லை என்றதும், அவர் சென்றுவிட்டார். ஒருமுறை என்னை தொடர்புகொண்டு, ‘நீ சரியானதும் நான் திரும்பி வருகிறேன்’ என்றார். அவர் சென்று மூன்று மாதங்களாகிவிட்டது.” அருணின் குரல், உடலை போலவே பலவீனமாக இருந்தது.

M. Palani Kumar

M. Palani Kumar
“காலை உணவும் இரவு உணவும் கொடுக்கிறேன்,” என்கிறார் அருணின் தாய். “குளிப்பாட்டியும் விடுகிறேன். கழிவறைக்கு செல்ல வேண்டுமெனில் தந்தை உதவுகிறார்.” அவரின் அறையில் வளர்ந்தவர்களுக்கான டயாபர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. “அவற்றை வாங்க மாதத்துக்கு 1,500 ரூபாய் ஆகிறது,” என்கிறார் அவரின் தந்தை.
“அவரின் சகோதரிகள் கல்லூரி வேலை இருப்பதால் தினமும் 5-10 நிமிடங்கள் அவருடன் பேசுகின்றனர்.” அவரின் தாய் நிறுத்தி பிறகு, “சற்று நடக்கத் தொடங்கி தன்னைத்தானே அவர் பார்த்துக் கொள்ள முடிந்தால் கூட போதும்,” என்கிறார்.
“அதற்கு நாங்கள் பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்,” என்கிறார் அவரின் தந்தை.
“மீண்டும் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல மாட்டேன்,” என்கிறார் அவரின் தாய். “கடந்த முறை சென்றபிறகும் ஏதும் மாறவில்லை. மீண்டும் செல்ல நான் தயாரில்லை.”
“என் மனைவிக்கு மருத்துவமனைகள் பிடிக்காது,” என கெளடா விவரிக்கத் தொடங்குகிறார்.

M. Palani Kumar

M. Palani Kumar
“இங்கு யார் அவரை பார்த்துக் கொள்வார்?” என கேட்டு மசனம்மாவா பதிலும் சொல்கிறார். “யாரும் இல்லை. நாங்கள் சென்றுவிட்டால், இங்கு யாரும் பார்த்துக் கொள்ள கிடையாது. நாங்கள் செல்ல முடியாது. எங்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது.” சட்டென எழுந்து தோட்ட வேலையை பார்க்க அவர் செல்கிறார். ஒருவேளை வேலை பார்ப்பது, அவருக்கு துயரத்திலிருந்து விடுவிப்பை கொடுக்கலாம்.
அருண் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாது. அவர் காத்திருக்க வேண்டும். யாரெனும் அவரை கவனிக்க காத்திருக்க வேண்டும். காலம் கழிய காத்திருக்க வேண்டும்.

M. Palani Kumar

M. Palani Kumar

M. Palani Kumar
வரும் மார்ச் மாதத்தில், நாவல் பழ மரங்கள் மீண்டும் பூக்கும். புலம்பெயரும் இந்திய பாறை தேனீக்கள், மஞ்சள் பூக்களின் தேனை தேடி அலையும். பிஆர் மலை காடுகளின் அடுத்த தேன் எடுக்கும் காலம் வரும். அருணின் இளம் நண்பர்கள் உயரமான மரங்களை நோக்கி செல்வார்கள். மீண்டும் ஒருமுறை ஜெனு குய்யோ ஹாடு என்கிற அவர்களின் பாடல் காட்டில் எதிரொலிக்கும்.
கூப்பிடு, அவனை கூப்பிடு, ஏ கூப்பிடுபவரே
இலை காட்டின் மனிதனை கூப்பிடு…
தொங்கும் கூடுகளில் தேன் இருக்கிறது…
தொங்கும் கூடுகளில் தேன் இருக்கிறது…
தொங்கும் கூட்டின் தேன், திடமான தேன்…
தொங்கும் கூட்டின் தேன், திடமான தேன்…
கூப்பிடு, அவனை கூப்பிடு, ஏ கூப்பிடுபவரே
அருணுக்கு முன்பு பாடல் தெரியாது; இனி அவர் அப்பாடலை பாடப் போவதும் கிடையாது…

M. Palani Kumar

M. Palani Kumar

M. Palani Kumar

M. Palani Kumar
அருணுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் டாக்டர் தன்யா சேஷாத்ரி, டாக்டர் சங்கீதா வி, பிஆர் மலைகளின் விவேகானந்தா கிரிஜானா கல்யாண கேந்திராவை சேர்ந்த சோளிகர் சமூக பணியாளர்களான கரானா கெதேகெளடா, பெங்களூருவின் பொது மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர் பிரத்மேஷ் ஆகியோர் கட்டுரைக்கு அளித்த பங்களிப்புக்கு அனைவருக்கும் கட்டுரை ஆசிரியர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார். கட்டுரையின் பல கட்டங்களில் மொழியாக்கத்துக்கு உதவிய டாக்டர் ஷோபனா கிரண், ஷங்கர் கெஞ்சானூர் மற்றும் தீபா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
தமிழில்: ராஜசங்கீதன்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/the-broken-winged-bird-of-br-hills-ta

