“பாபர் இந்தியாவிற்கு இரண்டு விஷயங்களைக் கொண்டு வந்தார் - பரூட் [துப்பாக்கிப் பொடி] மற்றும் பக்கார்-கானி,” என்கிறார் இஜாஸ் ஹசன். மூன்றாம் தலைமுறை நான்-பாய் அல்லது ரொட்டி தயாரிப்பாளரான இஜாஸ், பாட்னா நகரத்தின் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான லோடி கத்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள தந்தூர் அல்லது பாரம்பரிய களிமண் அடுப்பின் அருகில் அமர்ந்திருக்கிறார். மணி வடிவ நிலத்தடி அடுப்பை சுத்தம் செய்து, களிமண் மற்றும் தண்ணீரின் கலவையை கொண்டு பூசி, அதை குளிர்வித்துக் கொண்டிருக்கிறார்.
மொகலாய சமையலறைகளின் மெல்லிய, மிருதுவான, அடுக்குகள் நிறைந்த இனிப்புத்தட்டை ரொட்டியான பக்கார்-கானியின் பூர்விகத்தை சுற்றியுள்ள பல கதைகளில், இஜாஸ் ஹாசன் தனது தாத்தா ஹபீஸ் அமீர் ஹாசனிடமிருந்து கேட்ட கதை, அவருக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது. அவரது தாத்தா, ஒரு காலத்தில் ரொட்டி தயாரிப்பாளர்களிடையே ஒரு மேஸ்ட்ரோவான உஸ்தாத் நான்-பாய் ஆவார். "வங்காளத்திலும், கிழக்கு உத்தரபிரதேசத்திலும் பக்கார்-கானியின் வெவ்வேறு வகைகளைக் காணலாம். ஆனால் பாட்னாவில் இருப்பது மிகவும் விஷேசமானது. அதனாலேயே இது ஷாஹி [அரச உணவு] அல்லது மொகலாய பக்கார்-கானி என்று குறிப்பிடப்படுகிறது," என்று தனது உதவியாளர் இம்தியாஸ், காலை தேநீரை மறுபடி சூடுபடுத்தி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கும் இஜாஸ் கூறுகிறார்.
கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக, அசல் பாக்கார்-கானியின் லேமினேட் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சர்க்கரை பாகில் தோய்க்கப்பட்ட சிறிய ரொட்டிகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் மலிவு விலையில் விற்கப்படும் இவற்றின் வணிக தந்திரம், எஜாஸை எரிச்சலூட்டுகிறது. "அப் தோ ஹர் தூஸ்ரி ரொட்டி பக்கர்-கானி ஹை, அவுர் ஹர் தூஸ்ரா ஆத்மி நான்-பாய். பாட்னா மே ஆப்கோ 25-30 ரூபாய் கி பி பக்கர்-கானி மில் ஜாயேகி, மாகர் நா ஆப் கா தில் பரேகா நா சாலோன் சால் காம் காம் சீக்னே வாலோன் கா பேட் [தற்போது அனைத்து ரொட்டிகளையும் பாக்கார்-கானி என்கின்றனர். அதோடு அதை செய்யும் ஒவ்வொருவரும் தங்களை நான்-பாய் என்று அழைத்துக் கொள்கின்றனர். பாட்னாவில் ஒரு பக்கார்-கானியை 25-30 ரூபாய்க்கு பெறலாம். ஆனால் அது உங்கள் இதயத்தையோ அல்லது அதை முறையாக செய்ய பல காலம் கற்றறிந்த கைவினைஞர்களின் பசியையோ திருப்திப்படுத்தாது].”
மலிவான போலி ரொட்டிகள், நான்-பாய்ஸின் வயிற்றில் அடிக்கிறது. காலை முதல் பொழுது சாயும் வரை நான்கு பேர் வேலை செய்தாலும், ஒரு தந்தூரில் ஒரு நாளைக்கு 50 பக்கார்-கானிகளுக்கு மேல் செய்ய முடியாது, என இஜாஸ் தொடர்கிறார்.




























