அங்கு நிகழ்ந்த வன்முறையைக் கண்டு ஹபீப்-உன்-நிசா அதிர்ச்சியடைந்திருந்தாலும், போராட்டக்காரர்களைக் கண்டு உத்வேகமும் பெற்றுள்ளார். "ஒரு சாதாரண தாயான எனக்கு, என் குழந்தைகளே உலகம்," என்று மறைந்த சனா ஷேக்கின் தாயார் பாரியிடம் கூறினார். "ஒரு இல்லத்தரசியாக வாழ்ந்து வந்த என் வாழ்க்கையை அதிகாரத்தில் இருப்பவர்கள் சீர்குலைத்துவிட்டனர். அவர்களால் என் மகள் இறந்துவிட்டாள். எங்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே, எங்கள் வாழ்க்கையை சிதைக்கக் கூடாது."
மே 3, 2026 அன்று சனா தனது தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடித்த பிறகு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், மாணவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்தது. ஏற்கனவே தேர்வுக்காக தீவிரமாக தயாரானதில் சோர்ந்திருந்த அவர், மிகுந்த மனவேதனைக்குள்ளானார். நீட் என்பது மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,30,000-க்கும் குறைவான இடங்களுக்காக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் போட்டியிடும், கடும் போட்டி நிறைந்த ஒரு தேர்வாகும். பல ஆண்டுகளாக இதற்காக தயாரான நிலையில், அந்தத் தேர்வுக்கான பதற்றம் முடிந்துவிட்டதாக சனா நிம்மதியில் இருந்தார். ஆனால் அவர் மீண்டும் அந்த கடினமான செயல்முறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் தேர்வு எழுதுவதற்கான மனச்சுமையை விட, தற்கொலைக்கான கடிதம் எழுதுவது அவருக்கு சுலமபாக தோன்றியது. ஜூன் 21 அன்று நடைபெறவிருந்த மறுதேர்வுக்கு முந்தைய நாள், "என்னை மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துவிட்டு, அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதே காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொண்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களில் அவரும் ஒருவர்.
"அன்று காலை அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. ஒருவேளை என்னிடம் பேசியிருந்தால் முடிந்திருந்தால், அவள் இன்று நம்முடன் இருந்திருப்பாள்," என்று துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது தந்தை ஜாஃபர் போராட்டக் களத்தில் பேசுகையில் கூறுகிறார்.
"என் மனத்துயரத்தை வெளிப்படுத்தவே இவ்வளவு தூரம் வந்தேன்," என்று துயரத்தில் ஆழ்ந்துள்ள தாயார் ஹபீப்-உன்-நிசா கூறுகிறார். தனது மூத்த மகள் இனி உயிருடன் இல்லை என்பதை அவரால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இறக்கலாம் அல்லது முதுமை வரை வாழலாம்; ஆனால், வாழ்நாள் முழுவதும் இந்த வலியைச் சுமந்துகொண்டே இருப்போம்," என்று அவர் கூறுகிறார். "இரவில் என்னால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. கவலையில் நள்ளிரவில் என் கை கால்கள் நடுங்குகின்றன."
இருப்பினும், தங்கள் 15 மற்றும் 11 வயதுடைய இரு மகள்களை விட்டுவிட்டு, அந்தப் பெற்றோர் டெல்லிக்கு வந்தனர். "அவர்களை பற்றியும் நினைத்து நான் கவலைப்படுகிறேன். அதிகாரத்தில் இருப்பவர்களிடம், அவர்கள் செய்வது தவறு என்று சொல்லவே நான் இங்கு வந்தேன். அதிகாரம் உங்களைக் குருடாக்கிவிட்டதா? என்னைப் போன்ற தாய்மார்களுக்காகத்தான் இந்த மாணவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். என் துயரத்தைப் பகிர்ந்துகொண்டவர்களை காவல்துறை தாக்குவதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. எங்கள் வலியை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், உங்கள் அதிகாரத்தால் என்ன பயன்? தயவுசெய்து குழந்தைகள் மீது வன்முறையை உபயோகிக்காதீர்கள். 'பச்சோன் பே இத்னா ஜுல்ம் மத் கரியே' [தயவுசெய்து குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்கள்]."