“ஒரு தேர்வு அல்லது வேலை காரணமாக மட்டுமே நாங்கள் பேரணிக்கு வந்திருக்கிறோம் என நினைக்கிறார்கள். எங்களின் எதிர்காலம் இவர்களுக்கு பொருட்டாக இல்லை என்கிற விஷயம் நாள்தோறும் உறுதியாகி வருவதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்,” என்கிறார் சோட்டு யாதவ்.
27 வயதாகும் அவர், பிகாரின் சிவானிலிருந்து டெல்லிக்கு ரயிலின் பொதுப் பெட்டியில் நெருக்கியடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணித்து டெல்லிக்கு வந்திருக்கிறார். “எங்களின் ஊர்களில் இளைஞர்கள் புலம்பெயரும் கட்டாயத்திலேயோ கிடைக்காத வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையிலோதான் இருக்கிறார்கள்,” என்கிறார் சோட்டு.
“சலோ சன்சத் (நாடாளுமன்றத்துக்கு செல்வோம்)” என்கிற காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) அழைப்பு, மழைக்காலத் தொடர் ஜூலை 20, 2026 அன்று தொடங்கும் நாடாளுமன்றத்தில் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக கொண்டு செல்வதற்கான இளைஞர்களின் உத்வேகத்தை அளித்தது.
தற்போது போராட்டம் CJP-யையும் தாண்டி போராட்டம் வளர்ந்து நாட்டின் பல நகரங்களை எட்டி விட்டது.
தொடரும் வினாத்தாள் கசிவு, வேலையின்மை, அரசு பணியிடத் தேர்வில் தாமதம் போன்றவற்றுக்கு எதிரான பெரும் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. அரசின் அமைப்புகள், ஆட்சி அமைப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கை இழந்து வருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர். குறைந்து வரும் வாய்ப்புகள், அதிகரிக்கும் வேலைக்கான புலப்பெயர்வு, எதிர்காலம் குறித்த முடிவுகளில் பொருட்படுத்தப்படாத இளைஞர்கள், குறிப்பாக கிராமத்து இளைஞர்களின் நிலை ஆகியவற்றை பற்றிய விரக்தியை வெளிப்படுத்தும் தளமாக இந்த இயக்கம் உருவாகியிருக்கிறது.
“என்னை போல என் ஊரில் இருக்கும் இளைஞர்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காகதான் நான் டெல்லிக்கு வந்திருக்கிறேன்,” என்கிறார் பாலியில் மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் 25 வயது தீரம். மனிதவளத்துறை படிக்கும் 24 வயது நண்பர் அஷு ராமுடன் அவர் பயணித்து வந்திருக்கிறார். 15 மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் ஜூலை 19 மதியம் டெல்லிக்கு வந்தனர்.


























