…மோன்யுல் சோக்லே கியால் லோ
மோன்யுல் சோக்லே கியால் லோ
(...மோன்பா நிலம் நீடுழி வாழ்க
மோன்யுல் நீடுழி வாழ்க)
பள்ளி மாணவர்களின் கூடுகையில் கடைசியாக பாடப்படும் இந்தப் பாடலில்தான் எனக்குக் கேள்விகள் இருந்தது. பாடல் தெரியாததோ மொழி புரியாததோ காரணம் அல்ல. இமயமலையின் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பேசும் மொழிகளிலிருந்து அம்மொழி வித்தியாசமாக இருந்தது. கொஞ்ச காலமாக நான் மேற்கு காமேங் மாவட்டத்தின் சுக் கிராமத்தில் மோன்பா வாழ்க்கையை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
ஜூலையின் பிற்பகுதியில் ஒரு வியாழக்கிழமையின் காலைப் பொழுது. அருணாச்சல பிரதேசத்தின் அழகான கிராமமாக கருதப்படும் இடத்தில் நான் இருந்தேன். அரசு பள்ளி ஆசிரியரான நவாங் சேரிங்கின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்து, சுக்கிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ராமா முகாமின் பிஎம் ஸ்ரீ அரசு பள்ளியை அடைந்தேன். பக்கத்து கிராமங்களை சேர்ந்த பல குழந்தைகள் தினசரி காலை நடந்து பள்ளிக்கு வருகின்றனர்.
காலை 9 மணி. மாணவர் கூடுகைக்கான நேரம். மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் சில மாணவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவருக்கு நெருக்கமாக நின்று கொண்டேன். எனக்கு எதிரே பசிய மலைகளும் மாணவர்களின் சீருடை போல கறைபடாத மேகங்களை கொண்ட நீல வானமும் இருந்தது. 260 மாணவர்கள் வரிசைகளின் நின்று கொண்டிருந்தனர்.





