நடன ஆசிரியரான செபந்தி ராய்தான் முதன்முதலாக தன் மாணவரின் தோள்கள் வடிவமற்று இருப்பதை கண்டுபிடித்தார். நடனமாட விரும்பியவரின் நடன அசைவுகளில் வேறுபாடு தெரிந்தது. 13 வயது மாணவருக்கு ஸ்கோலியோசிஸ் நோய் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. “தொடக்கத்தில், நோய் குறித்து பெரிதாக நான் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் பால்யகாலத்தில் நான் ரசித்த நடிகர் ரித்திக் ரோஷனுக்கும் அதே சிக்கல் இருந்தது,” என்கிறார் செபாந்தி சிரித்தபடி.
21 வயதாக இருக்கும்போது ரோஷனின் ஸ்கோலியோசிஸ் நோய் கண்டறியப்பட்டது. அவரால் நடனமாட முடியாது என சொல்லப்பட்டது. முதுகெலும்பு வளையும் நோய்தான் ஸ்கோலியாசிஸ். அனைவருக்கும் வழக்கமான வளைவுகள் முதுகெலும்பில் உண்டு. ஆனால் இந்த நோய் இருக்கும் குழந்தைகளுக்கும் பதின்வயதினருக்கும் முதுகெலும்பு ‘S’ அல்லது ‘C’ வடிவத்தில் வளைந்திருக்கும்.
பதின்வயதில் செபாந்தி தெற்கு 24 பர்கானாஸில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கொல்கத்தாவுக்கு அடலசண்ட் இடியோபதிக் ஸ்கோலியோசிஸ் (AIS) அறுவை சிகிச்சை செய்துகொள்ள சென்றார். அந்த அறுவை சிகிச்சையில் இரு தடிகள், 14 திருகாணிகளுடன் முதுகுத்தண்டு நேராக அவரின் முதுகில் வைக்கப்பட்டது.
“இப்போது அந்த உணர்வே இல்லை,” என்கிறார் அவர் 12 வருடங்கள் கழித்து. “வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. ஸ்கோலியோசிஸுடன் வாழ பழகிக் கொண்டேன். என் வாழ்க்கையை திரும்பப் பெற்றேன்,” என்கிறார் அவர் புன்னகையுடன். மேற்கு வங்கத்தில் ஹூக்லி நதி, வங்காள விரிகுடாவை அடைவதற்கு முன் இடம்பெற்றிருக்கும் டைமண்ட் ஹார்பர் டவுனிலுள்ள அவரது தாத்தா வீட்டு மாடியில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.
செபாந்தியின் ஸ்கோலியோசிஸ் அவருக்கு சங்கடத்தை கொடுத்திருந்தபோதும், கோடிக்கணக்கான பிற நோயாளிகளுக்கு அது வலியையும் இருதயப் பிரச்சினைகளையும் சுவாசக்கோளாறையும் கொடுப்பதாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு, சரியான முதல் கட்ட பரிசோதனை கிடைப்பது கூட சவால்தான்.


















