“இது நான் பிறந்த இடம். இந்த காடுகளில் தான் அலைந்து திரிந்து வளர்ந்தேன், இந்த டோங்கர் [மலை],” ஏமா சோங்கல், நம் நிருபருக்கு தனது குக்கிராமத்திற்கு அறிமுகப்படுத்தும்போது, அவரது முகத்தில் புன்னகை அகலவில்லை. இயற்கை மற்றும் மனித குடியேற்றத்தின் அமைதியான கலவையாக, அடர்த்தியான பச்சை சஹ்யாத்ரிகளால் சூழப்பட்ட, சிவப்பு களிமண் ஓடுகள் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட வீடுகள். அது உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட எட்டு "முக்கிய பன்மைய மையங்களில்” இதுவும் ஒன்று என்பது, அவருக்கே தெரியாது.
துரதிர்ஷ்டவசமாக, சுமார் 280 ஹெக்டேர், விரைவில் நீருக்கடியில் மூழ்க வாய்ப்புள்ளது.
“எங்கள் பண்ணை, அந்த டோங்கருக்குப் பின்னால் இருக்கிறது,” மகாராஷ்டிராவின் லதேவாடி குக்கிராமத்தில் (கல்போண்டே கிராமத்தின் கிராம பஞ்சாயத்து) ஏமா, தனது வீட்டின் முன் முற்றத்தில் நின்றுகொண்டு ஒரு குன்றை சுட்டிக் காட்டுகிறார். வராய் (பண்ணைத் தோட்ட தினை) பயிரிடுவதற்காக அவர்களின் சிறிய பண்ணைக்கு சென்று வருவது 70 வயது ஆதிவாசிகளான அவருக்கும் அவரது மனைவி சுலிக்கும், ஒரு மணி நேர மலையேற்ற நடைபயணம் ஆகும். "இது பருவமழை விவசாயம். எங்களுக்கு 5-6 சாக்குகள் [குவின்டால்] கிடைக்கும்." ஒரு ஏக்கருக்கும் குறைவான இந்த பண்ணையில் இருந்து கிடைக்கும் மொத்த மகசூல், இவரது 15 குடும்ப உறுப்பினர்களான ஏமா, சுலி, அவர்களின் நான்கு மகன்கள், மூன்று மருமகள்கள் மற்றும் ஆறு பேரக்குழந்தைகளுக்கு அடுத்த வருட அறுவடை வரை போதுமானதாக இருக்கிறது. இவரது குடும்பம், இந்த பண்ணையைப் சார்ந்திருப்பது போலவே, காட்டையும் சார்ந்துள்ளது.
"காடும், எங்களுக்கும் தேவையானவற்றை வழங்குகிறது," எனும் அவர், "அதிலிருந்து பழங்கள், ரான்கண்ட் [காட்டு கிழங்குகள்], காய்கறிகள், சளி, காய்ச்சல், முழங்கால் வலிக்கு சிகிச்சையளிக்க மருத்துவ தாவரங்கள் பெறுகிறோம்," என்கிறார். தானே மாவட்டம், ஷாஹாபூர் தாலுகாவின் மா தாக்கூர் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த 97 குடும்பங்களைக் கொண்ட ஏமா மற்றும் அவரது சமூகத்திற்கு வாழ்வாதாரமாக இந்தக் காடும் உதவுகிறது. "நாங்கள் மரங்களை வெட்டுவதில்லை. விழுந்த கிளைகளை விறகுகளுக்காக சேகரிக்கிறோம். மண், செங்கற்கள் மற்றும் காட்டு மரத்தால் பக்கா வீடுகளை கட்டுகிறோம்; அவை பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்."




















