ஏழு சிறுமிகள், ஆறு கிராமங்கள், ஐந்து தாய்மொழிகள், இரண்டு விளையாட்டுகள், ஒரு விளையாட்டு மொழி!
ரஞ்சன் ரதவா, 12, ஜோதி பில், 11, ஷர்மிளா தேக்கி, 9, கிஜால் நாயகா, 10 மற்றும் நிரல் ரதவா, 10 ஆகியோர் வசந்த சாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தின் சோட்டாதேப்பூர் மாவட்டத்திலுள்ள பழங்குடி கிராமமான தேஜ்கத்தின் கொராஜ் மலை அடிவாரத்தில் இருக்கும் ஆரம்ப நிலை விடுதிப் பள்ளி அது.
அடக்கோ தடுக்கோ தகி தடுக்கோ
ஷ்ராவன் காஜே, பில்லு பாகே…
பத்-பத் கீதோ எனப்படும் அர்த்தமற்ற அந்த குஜராத்தி பாடல், குஜராத் மாநிலத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடுகையில் பாடும் பாடல். சுவாரஸ்யம் என்னவென்றால், அப்பாடலின் மொழி, அக்குழுவிலுள்ள எவருக்கும் தாய்மொழி கிடையாது என்பதுதான். பள்ளியிலிருந்து 30-50 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் ஊர்களிலுள்ள தங்களின் குடும்பத்தினருடன் அந்த ஐந்து சிறுமிகளும் ரதாவி, தானகி, துங்காரா, பிலி, நாயகி போன்ற பழங்குடி மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால் பள்ளியும் விடுதிகளும் இருக்கும் பழங்குடி அகாடமி வளாகத்தில், குஜராத்திதான் அவர்களுக்கு தொடர்பு மொழியாக இருக்கிறது.





