"நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஆவணங்களை சமர்ப்பிப்பதிலும், இங்குள்ளவர்களைப் போலவே நாங்களும் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசுக்கும், சக குடிமக்களுக்கும் நிரூபிப்பதிலும் செலவிட்டு வருகிறோம்."
பஹருல் இஸ்லாம், குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்கள், ஈரமான குப்பைகள், அட்டை, தெர்மாகோல் என ஒவ்வொன்றையும் தனித்தனி பிளாஸ்டிக் சாக்குகளில் போட்டு அவர் அடுக்கி வைக்கிறார். 35 வயதான இவர், அசாமின் பார்பேட்டா, போங்கைகான், கோல்பாரா ஆகிய மாவட்டங்களின் 13 புலம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர். அவர்கள் ஹரியானாவின் அசர்பூர் நகரில் ஒன்றாக வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் குப்பை சேகரித்தல் மற்றும் தரம் பிரித்தல் ஆகும்.
"இங்கும், அசாமிலும் மக்கள் எப்போதும் எங்கள் அடையாளத்தை கேள்வி கேட்கிறார்கள்." ஒவ்வொருவரிடமிருந்தும் ஆவணங்களைக் கோரி அதிகாரிகள் தனது பகுதிக்கு வந்து செல்வதாக பஹருல் கூறுகிறார். "நாங்கள் குப்பைகளை எடுக்கச் செல்லும்போது, நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று மக்கள் கேட்கிறார்கள். அசாம் என்று கூறினாலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களை நினைத்துக் கொள்கிறார்கள். குற்றவியல் பதிவு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் அசாம் போலீஸின் உறுதியைப் பெற்றுத் தர பெரும்பாலும் கேட்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். "நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது முக்கியமல்ல," என்கிறார் அசாமில் நடத்தப்படும் குடிமக்களுக்கான தேசிய பதிவேடு (NRC) குறித்து அறிந்த பஹருல். நில உரிமை ஆவணங்கள் இருப்பதால் கவலையில்லை என்று கூறுகிறார்.
அதே வளாகத்தில் வசிக்கும் சகோதரர்களான ரியாஸ், நூர் இஸ்லாம் ஆகியோர், பிரம்மபுத்திரா நதிக்கு அருகில் தங்கள் நிலத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெள்ள பாதிப்பால், விவசாயத்தை நம்பியிருக்க முடியவில்லை என்றும், இதனால் அசாமை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர். பார்பேட்டாவில், அவர்களின் பெற்றோர் 800 சதுர அடி நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். அதில் அவர்கள் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் பிற காய்கறிகளை பயிரிடுகிறார்கள். "கனமழை பெய்யும் போது, ஆற்று நீர் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, எங்களை வெளியேற்றுகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க வாழை மரக் கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்," என்று சகோதரர்கள் கூறுகின்றனர். தேசிய ரிமோட் சென்சிங் மையத்தின் (NRSC) கூற்றுப்படி, 1998 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் அசாம் மாநிலத்தில் சுமார் 28.75 சதவிகித நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.














