குறிப்பு: இந்திய கிராமங்களில் இருக்கும் ஆரோக்கிய நிலை குறித்த தொடரின் முதல் கட்டுரை இது
மலாஜ்பூரின் சிறு விவசாய கிராமத்தில் 17 வயது சவி துர்வேவும் 16 வயது ஆஷா கொர்குவும் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன), வழக்கத்துக்கு மாறான நட்புறவு கொண்டிருக்கின்றனர். ஒரு வருடத்துக்கு முன்னால் கோவில் விழாவில் அவர்கள் சந்தித்தார்கள். பேயோட்டும் சடங்குக்காக இருவரையும் இருவரின் குடும்பங்களும் அழைத்து வந்திருந்தன. இரு இளையோரும் அவர்தம் குடும்பத்தினரும் அவர்களை பேய் பிடித்திருப்பதாக நம்பினர்.
“அறைக்குள் அங்குமிங்கும் தூக்கி போடப்பட்டு, வலிப்பு வந்து மயங்கி விடுவேன். கடுமையான வலி இருக்கும். விழித்தெழும்போது ஏதும் நினைவில் இருக்காது,” என்கிறார் சவி. “அதேதான்,” என்கிறார் சவி முடிப்பதற்கு முன்பே ஆஷா. “எனக்கும் ஏதும் நினைவில் இருக்காது.”
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு எந்த விஷயமுமின்றி சிரித்துக் கொள்கின்றனர். இயல்பாக பதின்வயதினரிடம் தென்படும் உற்சாகமான நட்புறவுதான் அது. இரு பெண்களும் கோவில் வளாகத்தில் ஒரு மாதகாலமாக வசித்து வருகிறார்கள். இருவரும் பிரியாமல் உற்ற தோழிகளாகிவிட்டனர். ஆரத்தி எடுக்கும்போது கூட அருகருகே அமர்ந்து கொண்டு, கோவிலில் சாமியை சுற்றி வரும்போது நகைச்சுவை துணுக்குகளை கிசுகிசுத்துக்கொண்டு, பேசிக் கொள்கின்றனர்.
ஆஷாவை அன்புடன் பார்த்து சவி, “எளிதில் அவளுக்கு பிடித்துவிடும்…”
“-என்னால் விளக்க முடியவில்லை-”
“-ஆரத்தி எடுக்கும்போது பார்ப்பீர்கள்-”
“- இப்போது ஓரளவுக்கு தேறியிருக்கிறேன் - “ என கோவில் வாசம் உதவியிருப்பதாக சொல்லி முடிக்கிறார் ஆஷா.
பூதோன் கா மேலா என அழைக்கப்படும் மலாஜ்பூரின் பேயோட்டும் விழா, நூற்றாண்டு பழமையான வருடாந்திர நிகழ்வு. மகா பூர்ணிமாவில் (ஜனவரி-பிப்ரவரி பெளர்ணமி நாள்) தொடங்கி பசந்த் பஞ்சமியில் (வசந்த கால வரவு) முடியும். பெதுல் மாவட்டத்தின் சிச்சோலி ஒன்றியத்தில் நடக்கும் விழா, குருசகாப் பாபா அல்லது தியோஜி மகாராஜ் என அழைக்கப்படும் துறவியின் சமாதியை சுற்றி நடக்கிறது. பேய் பிடித்தவர்களை குணப்படுத்தும் சக்தி அவருக்கு இருந்ததாக நம்பப்படுகிறது. கோவில் வளாகத்துள் இருக்கும் ஆலமர இலைகளில் பேய்கள் சிக்கியிருப்பதாக ஊர்வாசிகள் நம்புகின்றனர். ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் நம்பிக்கை உள்ளவர்களும் மத்தியப்பிரதேச பகுதிகளிலிருந்தும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வருகின்றனர்.












