தூஃபானி மற்றும் அவரது குழு நெசவாளர்கள், காலை 6:30 மணி முதலே வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 12 அங்குலம் வரை பின்னும் இவர்கள் நால்வரும், தாங்கள் வேலை செய்யும் 23x6 அடி கலிச்சாவை (கம்பளம்) முடிக்க 40 நாட்கள் எடுக்கும்.
பனிரெண்டரை மணியளவில், தூஃபானி பிந்த், ஒரு மர பெஞ்சில் ஓய்வெடுக்க அமர்கிறார். அவருக்குப் பின்னால், அவர் வேலை செய்யும் தகரக் கொட்டகை உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பூர்ஜாகிர் முஜேஹாரா கிராமத்தில் உள்ள அவரது இந்த பட்டறையில் ஒரு மரச் சட்டத்தில் வெள்ளை பருத்தி நூல்கள் தொங்குகின்றன. இது இம்மாநிலத்தின் கம்பள நெசவுத் தொழிலின் இதயம் ஆகும். இங்கு முகலாயர்களால் மிர்சாபூரில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயர்களால் தொழில்மயமாக்கப்பட்டது. விரிப்புகள், பாய்கள் மற்றும் கம்பளங்களின் உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் ஆதிக்கம் செலுத்துகிறது. இவர்களின் உற்பத்தி, தேசிய உற்பத்தியில் பாதி (47 சதவீதம்) என்று 2020 ஆம் ஆண்டு அகில இந்திய கைத்தறி மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
மிர்சாபூர் நகர நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும்போது, புர்ஜாகிர் முஜேஹாரா கிராமத்திற்குச் செல்லும் சாலை சற்றே குறுகலாகிறது. இருபுறமும் பக்கா, பெரும்பாலும் ஒற்றை மாடி வீடுகள், அதே போல் ஓலைக் கூரையுடன் கூடிய கச்சா வீடுகள்; வறட்டி பிண்ணாக்குகளிலிருந்து வரும் புகை, காற்றில் கலக்கிறது. பெரும்பாலும் பகலில், ஆண்களைக் காண முடிவதில்லை. ஆனால் அடிகுழாயின் கீழ் துணி துவைப்பது, உள்ளூர் காய்கறிகள் அல்லது ஃபேஷன் பாகங்கள் விற்பனையாளரிடம் பேசுவது என வீட்டு வேலைகள் செய்யும் பெண்களைக் காணமுடிகிறது.
இது நெசவாளர்களின் இடம் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இங்கு இல்லை - உள்ளூர்வாசிகள் குறிப்பிடுவது போல் கம்பளங்கள் அல்லது கலிச்சா எதுவும் வெளியில் தொங்கவிடப்பட்டோ அடுக்கி வைக்கப்பட்டோ இல்லை. வீடுகளில் கம்பள நெசவு செய்வதற்கு கூடுதல் இடம் அல்லது அறை ஒதுக்கப்பட்டிருந்தாலும், தயாரானதும், இடைத்தரகர்கள் அதை துவைத்து சுத்தம் செய்ய எடுத்துச் செல்கின்றனர்.
ஓய்வின் போது பாரியிடம் பேசிய, தூஃபானி, "நான் அந்த கலையை [பின்னல் நெசவு] என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன், மேலும் எனது 12-13 வயதிலிருந்தே இதைச் செய்து வருகிறேன்." என்கிறார். அவரது குடும்பம் பந்த் சமூகத்தைச் சேர்ந்தது (மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது). உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான நெசவாளர்கள் ஓபிசியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.























