“எங்களின் வீடுகளை தகர்க்க அவர்கள் யானைகளை அழைத்து வர வேண்டியிருந்தது,” என்கிறார் பாரத்ஜோய் ரியாங்.
“அவற்றை (யானைகள்) கொண்டு கூட, அவர்களால் இடிக்க முடியவில்லை. எங்களின் டோங்குகளை அவர்கள் எரிக்க வேண்டியிருந்தது.” அஸ்ஸாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் இருந்த வீட்டிலிருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வனத்துறையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை 75 வயது ரியாங் பழங்குடி நினைவுகூருகிறார். அது 1980களின் காலம். அவர் குறிப்பிடும் வீடுகள் டோங்க் கர் அல்லது கைரிங் நோக் என உள்ளூர்வாசிகளால் அழைக்கப்பட்டன. திரிபுராவின் பழங்குடி சமூகங்கள் வழக்கமாக வசிக்கும் வீடுகள் அவை.
“மலைமக்களான எங்களுக்கு, மண் அல்லது கல் வீடுகளில் வசிக்கும் பழக்கம் கிடையாது. டோங்குகள்தான் எங்களுக்கு பிடித்தமானவை,” என்கிறார் அவர், வடக்கு திரிபுராவில் இருக்கும் தன் வீட்டை சுட்டிக் காட்டி. மூங்கில் தடிகளில் நிற்கும் மூங்கில் வீடுகள் அவை. தரையிலிருந்து ஓரடி உயரத்தில் இருக்கும். பாரம்பரியமாக, ஓலை வேயப்பட்டிருக்கும். ஆனால் பாரத்ஜோயின் டோங்கில் தகரப்பாய் வேயப்பட்டிருக்கிறது. பக்பாசாவிலிருந்து வரும் நீண்ட கற்சாலைக்கு பக்கத்தில் வீடு இருக்கிறது. அந்த சாலை, நாம் பேசிக் கொண்டிருக்கும் சைதாங் கிராமத்தின் டோங்க்சேரா பகுதியுடன் இணைகிறது.
இந்த பகுதிக்கு வரும்போது நீங்கள் எதிர்கொள்ளும் முதல் வீடுகளில், பாரத்ஜோயின் வீடும் ஒன்று. இப்பகுதி பசுமையும் நீர்நிலைகளும் போர்த்திய உயர மலைகளின் கரங்களில் அமைந்திருக்கிறது. திரிபுராவின் தர்மாநகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த தனியான பகுதியில் ரியாங் பழங்குடியினரின் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. மாநிலத்தில் அதிகமாக பாதிக்கத்தக்க பழங்குடி குழுவாக வரையறுக்கப்பட்டிருக்கும் பழங்குடி சமூகம் அது.


















