“இங்கு நெல் எதுவும் கிடையாது, நாப்கின்கள்தான் இருக்கின்றன. அந்தமான் நிலத்தை நீங்கள் தோண்டினால், நாப்கின்கள்தான் கிடைக்கும்!” என சீமா கிண்டலாக சொல்ல, மற்ற நான்கு பெண்களும் சிரிக்கின்றனர்.
வந்தூர் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், “X” குறி போட்டு குறிப்பிடப்பட வேண்டிய தேவையில்லாத ஒரு மூலை உண்டு. வீட்டின் ஒவ்வொரு பெண்ணும் வரைபடம் இன்றி அதை கண்டுபிடிப்பார். சானிடரி நாப்கின்களை அவர்கள் புதைக்கும் இடம் அது. எனினும் மொண்டால் பெண்கள், அந்த இடத்தை எனக்கு காட்ட தயக்கம் காட்டுகின்றனர்.
“ஒரு மாதத்துக்கான நாப்கின்களை சேகரிப்போம்,” என சொல்லும் சீமா தொடர்ந்து, “பிறகு மண்ணில் ஒரு குழி தோண்டி, அவரை போட்டு புதைப்போம். வீட்டை சுற்றிதான் எல்லாரும் அவற்றை புதைக்கின்றனர். எங்களது வீட்டருகே ஒரு இடம் இருக்கிறது. ஆனால் அது சகதியாக இருப்பதால், வீட்டின் மூலையில் ஒரு இடத்தில் நாங்கள் புதைக்கிறோம். சில நேரங்களில், அதே குழிக்குள் நாங்கள் அவற்றை போடுவோம். சில நேரங்களில் புதிய குழிகளை தோண்டுவோம்,” என்கிறார் அவர்.
தெற்கு அந்தமானின் மேற்கு பகுதியிலுள்ள கிராமத்தின் வீட்டுக்கு வெளியே ஐந்து பெண்கள் அமர்ந்து கொண்டு, மாதவிடாய் நாப்கின்களை கழிக்கும் முறைகளை பற்றி உரையாடுகின்றனர். “இதைப் பற்றி ஏன் முதலில் பேச வேண்டும்? நாங்கள் இதை பற்றியெல்லாம் பேசியதில்லை.” மொண்டால் குடும்பத்தை சேர்ந்த 72 வயது முதும்பெண் ஊர்மிளா எங்களின் உரையாடலை இடைமறித்து சொல்கிறார். யூனியன் பிரதேசத்துக்கு பல தலைமுறைகளாக வந்த வங்க மக்களின் பல்வேறு சமூகங்களில் அவரது குடும்பமும் அடக்கம்.
“எங்களின் மாதவிடாய் பற்றி யாரும் எங்களுக்கு சொன்னதில்லை,” என்கிறார் அவர். “அவர்கள் மாசிக் (மாதாந்திரம்) என வங்க மொழியில் அதை குறிப்பிடுகிறார்கள். மாதவிடாய் முதலில் வரும்போதுதான் எங்களுக்கு தெரியும். என் அக்காவிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்ல மாட்டோம். கோவிலுக்கு செல்ல மாட்டோம். வீட்டில் சமையலறைக்குள் செல்ல மாட்டோம். அவைதான் கட்டுப்பாடுகள். நான் எதையும் மீறியதில்லை. எனவே அவற்றை மீறினால் என்ன நடக்குமென்பது எனக்கு தெரியவில்லை,” என்கிறார் அவர்.
மொண்டால் வீட்டுக்கு வெளியே கூடிய பெண்கள், மூன்று தலைமுறைகளை சேர்ந்தவர்கள். முதும்பெண் ஊர்மிளா, 41 வயது மருமகள் சிமா மொண்டால், சிமாவின் மகள்களான 17 வயது பனி மற்றும் 21 வயது ஷிகா மற்றும் அவர்களின் உறவினர் 33 வயது ஷிவானி மொண்டால் ஆகியோர். இன்னும் பழைய ஒடுக்குமுறைகளை கொண்டிருக்கும் சமூகத்தில் தங்களின் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தவென அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி வைத்திருக்கின்றனர்.













