தாரிக் அகமது 10 வருடங்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 37 வயதாகும் அவர் 2009-2019 வரை ஒன்றிய அரசின் சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி தன்னார்வலராக இருந்து வருகிறார். புலம்பெயர்ந்து செம்மறிகளையும் ஆடுகளையும் மேய்ச்சலுக்காக லடாக்குக்கு கொண்டு வரும் பகர்வால் குடும்பங்களின் குழந்தைகளுக்காக உயரமான ட்ராஸ் பகுதியில் பணிக்கமர்த்தப்பட்டார்.
2019ம் ஆண்டில் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது அவரின் வேலை பறிபோனது. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் அவர் - ரஜவுரி மாவட்டத்தின் கலகோடேவில் வீடு இருக்கிறது - ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வெளியே குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாது.
“இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவானதிலிருந்து, குழந்தைகளுக்கான கல்வி அமைப்பு பெரும் சிக்கலில் இருக்கிறது,” என்னும் தாரிக், நாடோடி மக்களின் குழந்தைகளை மறந்ததற்காக அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்.
“நடமாடும் பள்ளிகளோ ஆசிரியர்களோ கார்கில் பகுதியின் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து ட்ராஸ் பகுதி வரை எங்களுக்கு இல்லை. எங்களின் குழந்தைகள் நாள் முழுக்க சுற்றித் திரிந்து, உள்ளூர்வாசிகளிடம் உணவு கேட்டு தொல்லை கொடுக்கும் நிலையில் இருக்கின்றன,” என்கிறார் கலகோடேவின் பத்தேரா கிராமத் தலைவர் ஷமிம் அகமது பஜ்ரான்.
புலம்பெயர்பவர்களுக்காக ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான தற்காலிகப் பள்ளிகள் இருப்பதாக சொல்லும் பகர்வால் சமூகத்தினர், லடாக்குக்கு இடம்பெயருகையில் அவர்களின் குழந்தைகள் ஆறு மாதங்களுக்கு - மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை - கல்வியை இழப்பதாக சொல்கின்றனர். பள்ளிக்கல்வியை இங்கு இழக்கும் குழந்தைகள், சக மாணவர்களை விட பின்தங்கும் நிலை நேர்கிறது. பகர்வால் சமூகத்தில் 32 சதவிகிதம் பேர் படித்திருக்கினர். அது மாநிலத்தின் எல்லா பழங்குடி பிரிவுகளை காட்டிலும் குறைவு என்கிறது பழங்குடியினர் பற்றிய 2013ம் ஆண்டு அறிக்கை.









