சதாரியா ஜினி ரெ ஜினி, சதாரியா ஜினி ரெ ஜினி
ராம் நாம் ராஸ் பினி சதாரியா ஜினி ரெ ஜினி
அஸ்தா கம் கா சர்க்கா பனாயா, பஞ்ச் ததா கி பூனி
நெள தாஸ் மாஸ் பினான் கோ லாகே, மூராக் மைலி கினி
சதாரியா ஜினி ரெ ஜினி
(இந்த துணி அழகாக இருக்கிறது, மிகவும் அழகு.
ராமர் பெயர் நிறைந்திருக்கிறது. ஓ இந்த துணி அழகு
எட்டு மடிப்பு தாமரை சுற்றும் சக்கரம் நூலாகவும்
ஐம்பூதங்களின் இழைகளாகவும் ஆகிறது,
ஒன்பது-பத்து மாதங்கள் நெய்தது, அதை மண்ணாக்காதே மூடனே
இந்த துணி உடுத்தினால் அழகாக இருக்கும்…)
நேரு தாஸின் விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளில் விளையாடி இசையையும் உணர்வுகளையும் அவர் பாடும் கபீர் கவிதைக்கு செம்மையாக கோர்க்கின்றன. அந்த விரல்கள் தறியில் ஒருகாலத்தில் எப்படி ஆடியிருக்கும் என்பதை கற்பனை செய்வது எளிது. இப்போதெல்லாம் பாடுவதுதான் அவருக்கு இயற்கையாக வருகிறது. அந்த பாரம்பரியத்தை அவர் இரு மகன்களுக்கு கடத்தியிருக்கிறார். ஆனால் கபீர் பந்தியான (15ம் நூற்றாண்டு கவிஞரான கபீரை பின்பற்றுபவர்) அவர், வேலைக்கும் பாடலுக்கும் இருக்கும் தொடர்பை நமக்குக் காட்ட ஆர்வத்துடன் இருக்கிறார்.
“இந்த உடலை நெய்ய கடவுள் எடுத்துக் கொள்ளும் நேரம் போல, தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்க ஒன்பது மாதங்கள் ஆகிறது. எங்களின் கபீர் சாகிப், இதை நெசவுடன் ஒப்பிட்டு உலகின் உண்மையை விளக்குகிறார்.” 78 வயது நேரு தாஸ், பைகாசாக்கில் இருக்கும் முதிய நெசவாளர் என தன்னை குறிப்பிடுகிறார்.






















