“கௌடி, கௌடி, கௌடி, கபடி, கபடி, கபடி…”
ரெய்டர்களுக்கும், ஸ்டாப்பர்களுக்கும் இடையேயான போர்க்களமாக காட்சியளிக்கும் இந்த மண் தரை வட்டத்திற்குள் கோஷங்கள் உரக்க ஒலிக்கின்றன. அது, டெல்லிக்கு வெளியே சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் நடந்த 2020-2021 விவசாயிகளின் போராட்டக் களம். கபடி விளையாட்டு வர்ணனை, எதிர்ப்பு முழக்கங்கள் மற்றும் உரைகளுடன் கலந்து, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த களம்.
செப்டம்பர் 2021-ல் நடந்த ஒரு வார காலப் போட்டியின் முடிவில், ஹரியானாவின் ரோத்தக்கைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஷிலு பல்ஹாரா அறிமுகமானார். அவர் குறைந்த வருமானம் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உறுதியான நிதி நிலைத்தன்மையைப் பெறும் பஞ்சாபின் கபடி நட்சத்திரங்களோடு இணைந்தார்.
பஞ்சாப் கிராமங்களில் சிறுவர்கள் முதலில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் வட்ட கள கபடி. எளிமையான இந்த விளையாட்டுக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை. பெரும்பாலும் வீரர்கள் காலணிகள் கூட அணிவதில்லை. மண் தரையில் விளையாடப்படும் இந்த ஆட்டத்துக்கு விதிகளும் எளிமையானவை.
கட்டுடல் வளர்க்க விரும்பும் இளைஞர்களுக்கு, இது உடல் ரீதியாக சவாலான விளையாட்டு என்பதால், ஒரு கூடுதல் ஈர்ப்பு. பஞ்சாப் பாணி கபடி என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு, திருவிழாக்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடப்படுகிறது.
பஞ்சாபில் கபடிப் பருவம் விவசாய பருவத்துடன் ஒத்து வருகிறது. அக்டோபரில் விதைப்புக்குப் பிறகு தொடங்கி, ஏப்ரலில் அறுவடை வரும் வரை தொடர்கிறது.




















