மனோர் ஃபாட்டா (சந்திப்பு) பகுதியில் குளிரான காலைப் பொழுதில், விவசாயிகள் அணைந்து கொண்டிருக்கும் தீக்குவியல்களின் சாம்பலைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். முந்தைய இரவு கடுங்குளிராக இருந்தது. அதிகாலையும் சளைத்ததல்ல. லட்சுமி தத்து போபா அதை விவரிக்கையில், “மேலிருந்து குளிர்ந்த நீர் மழையாக பெய்து, எங்கள் மீது கொட்டுவது போல இருந்தது,” என்கிறார்.
குளிர் கடுமையாக இருந்தது. ஆனால் நிலம், நீர், அதற்கும் மேலாக, கூலி வேலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து 46 வயது பழங்குடி விவசாயிக்கு இருந்த கோபம் அதைவிடக் கடுமையாக இருந்தது. அவரைப் போலவே, பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களின் நீண்டகால பிரச்சினைகளான நிலப் பட்டாக்களை முறைப்படுத்துதல், குடிக்க ஏதுவான நீர் மற்றும் முக்கியமாக, கூலி வேலை ஆகியவற்றுக்குத் தீர்வு காணக் கோரி பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்றனர். இந்தப் பிரச்சினைகளின் தீர்வு தான் அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படையாக உள்ளன.
"வருடம் முழுவதுமெல்லாம் இல்லை. எங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூட வேலை கிடைப்பதில்லை," என்று கோபத்துடன் கூறுகிறார் லட்சுமி. மத்திய அரசு சமீபத்தில் இத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்து, அதற்கு 'விக்சித் பாரத் – ஜி ராம் ஜி சட்டம்' (விபி-ஜி ராம் ஜி) எனப் பெயர் மாற்றியுள்ளது. இதன் மூலம் வேலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மீறி, இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை மாநிலங்களின் மீது சுமத்தியுள்ளது.
சிபிஐ (எம்) மற்றும் அகில இந்திய கிசான் சபாவின் மகாராஷ்டிரப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்களின் மற்ற முக்கிய கோரிக்கைகளில், ஆண்டுக்கு குறைந்தபட்ச 600 ரூபாய் ஊதியத்தில் 200 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்பதும் ஒன்றாகும். ஜனவரி 19, 2026 அன்று தொடங்கிய இந்தப் பேரணி, ஜனவரி 21 அன்று, ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.












