கஜானந்த் சஹாரியா, தான் ஒரு நில உரிமையாளர் என்று முதன்முதலில் கேள்விப்பட்டது, சிலர் அவரது குச்சா வீட்டிற்கு வந்து அவரது நிலத்தை விலை பேசிய போது தானாம். “10 பிகாக்கள் [தோராயமாக ஆறு ஏக்கர்] என் பெயரில் இருப்பதாக சொன்னார்கள். நான் [தோராயமாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில்] நிலத்தைப் பார்க்கச் சென்றேன். அது நன்றாக வளர்ந்து நின்றிருந்தது. எங்களாலும், வேறு யாராலுமே, அது ஒரு போதும் பயிரிடப்படவில்லை” என்று இந்த கலோனி கிராமத்தின் ஆதிவாசி குக்கிராமமான முண்டேயரில் வசிக்கும் அவர் நம்மிடம் கூறுகிறார்.
35 வயதான சஹாரியா ஆதிவாசி, புதிதாக தன் பெயரில் உள்ள சொத்தை நம்பமுடியாதவராகவும், அதனால் வரவிருக்கும் பணத்திற்காக மகிழ்ச்சியடைந்தவராகவும் இருந்தார். ஒரு நாளைக்கு சுமார் ரூ.200 சம்பளத்தில் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் தினக்கூலியாக வேலை செய்கிறார்; வேலைக்காக சில நேரம் வெளியூரும் போகிறார். 15 பேரைக் கொண்ட கஜானந்தின் கூட்டுக் குடும்பம் பெரும்பாலும் ஷாஹ்பாத் காட்டில் உள்ள கட்டிட மரம் அல்லாத வனப் பொருட்களை (NTFP) நம்பிப் பிழைக்கிறது. "நாங்கள் மஹுவா, டெண்டு, எரிபொருள் மரம், ஆச்சார், நெல்லிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வருகிறோம்," என்கிறார். "இதை வைத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம்." இதன் மூலம் அவர்களுக்கு மாதம் சில ஆயிரம் ரூபாய்கள் கிடைக்கிறது.
அவர்கள் நம்பியுள்ள காடு, கிழக்கு ராஜஸ்தானில் 179 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஷாஹ்பாத் தலேட்டி காடு. இது அரிய தாவரங்கள், மரங்கள் மற்றும் வனவிலங்குகளைக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை, வனத்துறை அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அதை பாதுகாப்பு சரணாலயமாக்கியது. கராயா [ஸ்டெர்குலியா யூரன்ஸ்] ஷாஹ்பாத் போன்ற ஒரு சில காடுகளில் மட்டுமே காணப்படுகிறது, இது தவிர இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவ தாவரங்களும் உள்ளன.
இக்காடு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்கப்படும், அட்டவணை I-ஐச் சார்ந்த விலங்குகள் மற்றும் பறவைகளின் தாயகமாகும். வங்காள மற்றும் தங்க நரி, இந்திய ஓநாய், சிறுத்தை (பாந்தெரா பர்டஸ்), இந்திய சாம்பல் நிற கீரி, வரி கொண்ட கழுதைப்புலி (ஹையனா ஹையனா), பேட்ஜர்கள், சிவெட் பூனைகள், சோம்பல் கரடி, சிவப்பு தலை கழுகு, இந்திய மயில் மற்றும் பலவும் இப்பட்டியலில் அடங்கும்.
இது குனோ தேசிய பூங்காவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில், மத்தியபிரதேசத்தின் காந்தி சாகரில் உள்ள சிறுத்தையின் இரண்டாவது தாயகமான குனோவை இணைக்க முன்மொழியப்பட்ட வழியில் வருகிறது. வேகமாக அழிந்து வரும் சிறுத்தைகளை பாதுகாக்க, இது உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஜூன் மாதம் முழுவதும் பெய்து வரும் மழையால், வனத்தில் நீரோடைகள் பெருகி ஓடைகளில் நிரம்பி வழிகிறது. இவை அனைத்தும் குண்டா கோ நீர்வீழ்ச்சியை நோக்கி பாய்கின்றன, இது 100 அடி கீழே, சேற்றுநீரை பள்ளத்தாக்கில் இறைக்கிறது. அதற்கும் கீழே குனோ நதி பாய்கிறது. மழையையும் பொருட்படுத்தாமல், NTFP தேடும் கிராமவாசிகளை இங்கே காணலாம்.



















