“இச்சே குசும் என்கிற நாடகத்தில் எனக்கு நெசவாளர் பாத்திரம். யதார்த்தத்தில் என்னுடைய வேலை அதுதான்,” என்கிறார் பழைய நாடகத்தின் திரைக்கதையை கையில் வைத்தபடி அசித் பிரமாணிக். நிறம் மங்கிய ஒரு இரும்பு அலமாரிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்த நாடகங்களின் திரைக்கதைகளை அவர் எடுத்திருக்கிறார்.
சந்திப்பூரி தங்கேல் மற்றும் ஜம்தானி கைத்தறி புடவைகளுக்கு பெயர் பெற்ற நாடியா மாவட்டத்தின் சந்திப்பூர் கைத்தறி கிராமங்களின் எண்ணற்ற நெசவாளர்களில் அசித்தும் ஒருவர். திறன் படைத்த இந்த நெசவாளரின் கைத்தறி உழைப்புக்கு நிகராக நாடகக் கலையும் இருக்கிறது. தண்ட் கர்ரின் (கைத்தறி கொண்ட அறை) தறிவேலையும் ரங்கா மஞ்சாவும் (மேடை) இவரின் அறுபது ஆண்டுகால வாழ்க்கைக்கு அடர்த்தியைக் கொடுத்திருக்கிறது.
முதல் மேடை நிகழ்ச்சியை பற்றி சொல்லும்போது, அசித்தின் முகம் சந்தோஷத்தில் ஒளிர்ந்தது. “சீல்டா ரயில் நிலையத்தருகே நாடகம் போடப்பட்டது. நீதிபதியின் பாத்திரத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, உண்மையில் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தேன்,” என சிரித்தபடி அவர், பொதுவெளியில் பெரிய நாடகக் குழுவில் பங்கேற்று பார்வையாளர்களை எதிர்கொண்ட அனுபவத்தை பகிர்கிறார்.
அதே உற்சாகத்துன் நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த விதத்தையும் அசித் சொல்கிறார்: “ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். சிறுவர்கள் முதல் வீட்டின் ஆண்கள், பெண்கள் வரை நெசவாளர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கைத்தறியுடன் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு வேலை செய்வார்கள்.” நூல் சுற்றுவது, நிறமூட்டுவது, சுழல் சக்கரம் கொண்டு நூலை மாட்டுவது, பிறகு அந்த குழலை ட்ரம்முக்குள்ளிருந்து சுற்றி எடுப்பது, இறுதியாக அதை தறியில் பொறுத்துவது போன்ற வேலைகளை வெவ்வேறு வயதுகளில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் செய்வார்கள். ”பிற தாந்தி (நெசவாளர்) குடும்பங்களை போல, எங்கள் வீட்டிலும், இளம் வயதிலிருந்து இந்த வேலைகளை செய்ய வேண்டும்,” என்கிறார் அவர்.








