2025ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 24 வயது வீணா ராணி பெரியளவு தூங்கவே இல்லை. பல மணி நேரங்கள் கயிற்றுக் கட்டிலில் கண் மூடி கிடந்தாலும், பஞ்சாபின் ஃபசில்கா மாவட்டத்தில் அவரது வீடு இருக்கும் வாலே ஷா உத்தர் கிராமத்து வீட்டிலும் குடும்பத்தின் வயலிலும் முந்தைய மாதம் நிரம்பிய வெள்ளத்தின் நினைவுகள்தான் ஓடிக் கொண்டே இருந்தது.
“முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாக இருக்கிறேன்,” என்கிறார் தூங்கும் நேர மருந்தை விழுங்கியபடி வீணா. மூன்று அறை கொண்ட அவர்களின் வீடு, ஊருக்கு வெளியே சட்லஜ் ஓடைக்கு அருகே இருக்கும் வயலுக்கு நடுவே அமைந்திருக்கிறது. வீட்டிலிருந்து அமைதியாக தெரியும் சட்லஜ் எட்டு அடி ஆழம் கொண்டிருக்கிறது. அதன் மறுபுறத்தில்தான் அவர்களின் நான்கு ஏக்கர் நிலம்.
”அவர் சிரிப்பதை நிறுத்திவிட்டார்,” என்கிறார் வீணாவின் சகோதரியான 26 வயது கைலாஷ் ராணி. அவர்களின் தந்தையான 52 வயது ஜர்னேல் சிங், உட்கார கட்டாயப்படுத்தினால் எப்படி அழுவார் என்பதை நினைவுகூர்ந்தார்.
“பயிர் போனபிறகு எப்படி பணம் கிடைக்கும் என்பதே என் சிந்தனையாக இருந்தது. எவ்வளவு நீர் நிற்கும், அடுத்த பருவத்தில் கோதுமை விளைவிக்க முடியுமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றார் வீணா. அவரின் பதற்றத்துக்கு என்ன காரணம் என நெருங்கியவர்கள் விசாரித்தபோது விளக்க முடியாமல் தவித்தார். “தலையை எதுவோ பிடித்து அழுத்திக் கொண்டிருப்பது போல் இருந்தது.”
கிராமத்தை சேர்ந்த அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வீணாவும் துயரத்தை கடந்து விட முடியுமென நினைத்தார்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அதிகமாக அவர் தனியாக இருக்கத் தொடங்கியதும் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அபோகரின் உளவியல் மருத்துவர் ஒருவரிடம் குடும்பத்தினர் அவரை அழைத்து சென்றனர். மன அழுத்தம் இருப்பதாக மருத்துவர் கண்டறிந்து ஐந்து மாதங்களுக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.
மருத்துவ மையத்தில் கூட அவர் அழுது கொண்டிருந்தார். “என் மூளை நரம்புகள் பலவீனமாகிவிட்டன,” என்கிறார் அவர்.
















