ருஜ்லுக் சு யார்சு தாய் கவ் பஹ்னய் ஆந்தே ஆந்தே, ஏக் தம் ஓ பஷா தாய் கவ் ஹம்லாய் ஆந்தே ஆந்தே…
அவன் வந்தான், மன்னிப்பு கேட்டு சென்றான். என்னை பார்த்ததும் சென்று விட்டான்.
நண்பன் வந்தான், மன்னிப்பு கேட்டு சென்றான். என்னை பார்த்ததும் சென்று விட்டான்.

Bandipore, Jammu and Kashmir
|TUE, AUG 05, 2025
Author
Editor
Photo Editor
Translator
ருஜ்லுக் சு யார்சு தாய் கவ் பஹ்னய் ஆந்தே ஆந்தே, ஏக் தம் ஓ பஷா தாய் கவ் ஹம்லாய் ஆந்தே ஆந்தே…
அவன் வந்தான், மன்னிப்பு கேட்டு சென்றான். என்னை பார்த்ததும் சென்று விட்டான்.
நண்பன் வந்தான், மன்னிப்பு கேட்டு சென்றான். என்னை பார்த்ததும் சென்று விட்டான்.
ஜம்மு காஷ்மீரின் தார்த்-ஷின் சமூகத்தை சேர்ந்த பிரபல கவிஞரான குலாம் ரசூல் முஷ்டாக் எழுதிய கவிதையை, கிஷன்கங்கா ஆற்றை பார்த்தபடி சொல்கிறார் ஃபரீத் அகமது லொனே.
கரையிலிருந்து பார்க்கையில், சிறு பனிப்படலங்கள் நகரத் தொடங்க, மெல்லிய படலங்கள் ஒன்று திரண்டு கொண்டிருப்பது தெரிகிறது. ஆறு இன்னும் உறையவில்லை. ஆனால் மாறிக் கொண்டிருக்கிறது. பருவம் மாறிக் கொண்டிருக்கிறது.
சில மீட்டர் தொலைவில், 25-30 கிலோ எடை உள்ள விறகு மற்றும் புல் கட்டுகளை உள்ளூர் பெண்கள் சுமந்து செல்கின்றனர். இன்னொரு பெண், குளிர்காலத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் தான் என்கிற அடுப்புக்கென மாட்டுச்சாணத்தை நிரப்பி ஒரு கொள்கலனை தூக்கி செல்கிறார். குரேஸ் பள்ளத்தாக்கை பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆறு மட்டுமின்றி, குளிர்காலத்துக்கு குரேஸ் பகுதி தயாராகும் முறையிலும் தென்படும் பருவ மாற்றத்தின் அடையாளங்கள ஃபரீத் சுட்டிக் காட்டுகிறார். தார்த் ஷின் சமூகத்தை சேர்ந்த அவர், பெரும்பாலான அவரது சமூகத்தின் மக்கள் குரேஸ் பள்ளத்தாக்கில் வசிப்பதாக சொல்கீறார். 37,992 தார்திய மக்கள் (கணக்கெடுப்பு 2011) அங்கு வசிக்கின்றனர்.

Muzamil Bhat

Muzamil Bhat

Muzamil Bhat

Muzamil Bhat
அக்டோபர் மாதத்தில் வரும் குளிர்காலத்தில், மொத்த பள்ளத்தாக்கையும் பனி போர்த்தியிருக்கும். “முதியவர்கள் மட்டும்தான் தங்குவார்கள்,” என்கிறார் 68 வயது ஃபரீத். பனியால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது சிரமம். “தங்கி விடுபவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேதான் இருப்பார்கள்.”
சில நேரங்களில் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் 15 அடி வரை பனி இருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு அத்தகைய பகுதிகள், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பற்று இருக்கும். இதனால் கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள்தொகை புலம்பெயர வேண்டியிருக்கிறது. “சிலர், காஷ்மீரின் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்வார்கள். பிறர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற இடங்களுக்கு வேலை தேடி புலம்பெயர்வார்கள்,” என்கிறார் தோட்டக்கலைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் அவர். காஷ்மீரிலேயே இருப்பவர்கள் சிறு ஹோட்டல்களில் அல்லது ஸ்ரீநகரின் ஹரிஸ்ஸா கடைகளில் உணவு தயாரிப்பவர்களுடன் வேலை செய்வார்கள். வாசிக்க: ஸ்ரீநகரில் சுடச்சுட கிடைக்கும் சுவையான ஹரிஸா
தீவிர குளிர்காலங்களும் அதிதீவிர வானிலையும் தொடர் சவாலாக இருக்கிறது. 2017ம் ஆண்டில், ஜனவரி 25 அன்று நான்கு பனிச்சரிவுகள் குரேஸை தாக்கின. ஃபரீதின் வீடு இருக்கும் தவாரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மஸ்குந்த் நீரு பகுதியில் நான்கு பேரும் 20 ராணுவ சிப்பாய்களும் உயிரிழந்தனர்.
குரேஸில் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாமல் இருந்த காலத்தை அவர் நினைவுகூருகிறார். 1970களின் தொடக்கத்தில், அருகாமை மர்கூத் கிராமத்தில் ஒரு மெளலவி (இஸ்லாமிய பிரச்சாரகர்) குளிர்காலத்தால் நோயுற்றார். 12-15 அடி ஆழ பனி இருந்தது. “மக்கள் அவரை ஒரு படுக்கையில் வைத்து தூக்கி சென்றனர்.” 86 கிமீ தொலைவில் இருந்த பந்திப்பூரின் மருத்துவமனையை அடைய இரண்டு நாட்கள் ஆனது.
இன்னொரு தருணத்தில் ஒரு உஸ்தாத் மொஹ்தாராமின் (மதிப்புக்குரிய ஆசிரியரின்) மகள் சிரம கர்ப்பத்தில் இருந்தார். மக்களுக்கான ஹெலிகாப்டர்கள் இல்லாத காலம் அது. பிரசவத்துக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமெனில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும். இந்திய ராணுவம் உதவிக்கு வந்தது. “அவர்களின் ஆபரேஷன் சத்பாவனாவின் ஒரு பகுதியாக ராணுவம் உதவியது.”
தற்போது நிலைமை ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பட்டியல் பழங்குடியாக வரையறுக்கப்பட்டிருக்கும் அம்மக்கள், அவசரகாலத்தில் வெளியே செல்ல, இன்னும் ராணுவத்தைதான் நம்பியிருக்கின்றனர். கர்ப்பங்களும் குழந்தை பிறப்புகளும் இன்னும் பிரச்சினையாகதான் இருக்கின்றன.

Muzamil Bhat

Muzamil Bhat
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே இருப்பதால், பருவகால புலப்பெயர்வை தாண்டி, எல்லை தாண்டிய குண்டு வீச்சும் இந்த மக்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.
முகாம்தளத்தை சுற்றி நடந்து கொண்டிருந்த ஃபரீத் திடீரென நிற்கிறார். “இந்த சாலையின் பிம்பம் பசுமையாக என் மனதில் இருக்கிறது,” என்கிறார் அவர். “2005ம் ஆண்டில், என் ஊரை சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் அவர்களின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். ஊருக்குள் வர இந்த பாலத்தில் அவர்கள் வர வேண்டியிருந்தது,” என்கிறார் அவர் சாலையின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டி.
“தந்தை பின்னால் இருந்தார். மகன் முன்னால் இருந்தார்,” என நினைவுகூரும் ஃபரீத், அச்சமயத்தில் அருகே இருந்த மசூதியில் இருந்து அவர்களை பார்த்திருக்கிறார். அவர்கள் மீது குண்டு விழுந்ததை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் அந்த குடும்பத்தின் துயரம் முடிந்து விடவில்லை என்கிறார் அவர். அதே நாளில், அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி, ராணுவ முகாமுக்கருகே இருந்த மையத்தில் தேர்வு எழுத சென்றபோது குண்டு வீச்சில் சிக்கியிருக்கிறார்.
அவரின் குரல் நடுங்குகிறது. “ஒரே நாளில் ஒருவர் மகனை இழந்தார். இன்னொருவர் மகளை இழந்தார்.” குண்டுவீச்சில் 20-25 பேர் பலியாகினர். பல கால்நடைகளும் உயிரிழந்தன.
இன்னொரு தருணத்தில், குண்டுவீச்சால் சந்தைக்கருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீ பற்றியதில் மொத்த துலாய்ல் சந்தையும் தீக்கிரையானது. தீ வேகமாக பரவியது என்கிறார் அவர். அந்த நாட்களில், பெரும்பாலான கட்டடங்கள் மரத்தில்தான் கட்டப்பட்டன.
“இங்கிருந்து சாக யார் விரும்புவார்? இத்தகைய இடத்தில் வாழ யார் விரும்புவார்?”

Muzamil Bhat

Muzamil Bhat
முன்பு கூட, பெரியளவுக்கு வருமான வாய்ப்புகள் குரேஸில் இருந்ததில்லை. “மாடுகளை மேய்த்தும் ராணுவத்துக்கு போர்டர் வேலைகள் செய்தும் மக்கள் பிழைத்துக் கொண்டிருந்தனர்.” எல்லாரிடமும் குதிரைகள் இருந்தன. வேலைவாய்ப்பு குறைவாகத்தான் இருந்தது,” என்கிறார் அவர். பலர், பாரம்பரிய கலையான பட்டு நெசவு செய்தனர். வாசிக்க: நசிந்து வரும் பட்டு நெசவு
பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுக்கு மக்கள் பயணிக்கும்போது, நல்ல வேலைகளும் கல்வியும், மருத்துவமும் கிடைக்கிறது. எனவேதான் மக்கள் பந்திப்பூர், கங்கன், கந்தர்பால் மற்றும் ஸ்ரீநகர் போன்ற இடங்களுக்கு சென்று வாழ்வதாக ஃபரீத் விளக்குகிறார்.
நிறைய பேர் வெளியேறி விட்டதால், தாய்மொழி பேசுவது கடினமாகி விட்டது. தார்த்-ஷின் மக்கள், பொருட்கள் வாங்க பந்திப்பூர் செல்கையில், பிற காஷ்மிரிகளுக்கு முன் பலரும் ஷினா மொழி பேசுவதில்லை. “ஒருவகை தாழ்வு மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ஒருவேளை நாங்கள் வித்தியாசமானவர்களாக இருக்கலாம்.”
எப்போதும் இப்படி இருக்கவில்லை. “என் இளம்வயதில், அனைவரும் ஷினாவில் பேசுவதை பார்த்திருக்கிறேன்,” என்கிறார் ஃபரீத். “ஆனால் இப்போது சந்தைக்கு நான் செல்லும்போதெல்லாம், எங்களின் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் உருது, இந்தி, காஷ்மிரி போன்ற மொழிகளிலும் சில நேரங்களில் ஆங்கிலத்திலும் கூட பேசுவதை பார்த்திருக்கிறேன்.”
ஷினா, இந்தியா ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அருகி வரும் மொழியாக யுனெஸ்கோவால் இது பட்டியலிடப்படவில்லை என்றாலும் இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. பாதிக்கத்தக்க மொழியாக இப்போது அது வரையறுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 40 வருடங்களில், ஹப்பா கதூன் பண்பாட்டு குழு உறுப்பினராக இருக்கும் ஃபரீத், தாய்மொழியை காக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். குரேசில் வாழும் மக்களால் நிதியளிக்கப்பட்டு இயங்கும் குழு, மொழி மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்துகிறது.

Muzamil Bhat

Muzamil Bhat
அம்முயற்சியை தொடருவது நாளாக நாளாக கடினமாகிக் கொண்டே வருகிறது. இங்குள்ள குழந்தைகளில் பெரும்பான்மை, குரேஸுக்கு வெளியேதான் படிக்கின்றன. எனவே கற்றுக்கொடுக்க எவரும் இல்லை. “பள்ளிகளின் காலை பிரார்த்தனை, புத்தகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் யாவும் உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்தான் இருக்கின்றன.” மேலும் அவர், “பள்ளிகளில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வுகளில் நான் ஷினா மொழியில் பாடினால், பெரும்பாலான குழந்தைகள் பாடல்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர்,” என்கிறார்.
குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாள் போன்ற முக்கியமான நாட்களில் நடக்கும் பெரிய நிகழ்வுகள், காஷ்மீரி மற்றும் உருது மொழிகளில் நடத்தப்படுகின்றன. “ஆனால் எங்களின் குழு இப்போது அந்த மனநிலையை மாற்றியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை தாய்மொழியில் நடத்த முயற்சிக்கிறது. நாட்டுப்புற பாடல்கள், கவிதைகளை கூட தாய்மொழியில் சொல்ல முயற்சிக்கிறோம்,” என்கிறார் அவர்.
*****
“சாவுக் என்றால் என்ன தெரியுமா? தாரிக் பர்வாய்ஸ் லோனே 10ம் வகுப்பு மாணவர்களை கேட்கிறார். அவர்கள் அவரை குழப்பத்துடன் பார்க்கின்றனர். “அப்படியென்றால் என்ன சார்? அது எப்படி இருக்கும்?” என ஆர்வத்துடன் கேட்கிறார் வான்போரா அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர். அடையாளம் தெரியாத ஒரு பொருளை வெளியே இழுக்கும் தலைமை ஆசிரியர், “இது ஒரு தறி. எங்களின் மூத்தார்கள் கம்பளி ஆடைகள் செய்ய இதை பயன்படுத்தினர்,” என்கிறார் மாணவர்களிடம்.
தொடரும் தாரிக், ஒரு பம்பரத்தை கரும்பலகையில் வரைகிறார். “இதை ஷினா மொழியில் என்னவென அழைப்போம்?” என மாணவர்களை கேட்கிறார். ஒரு குழந்தை, பம்பரத்தை குறிக்கும் காஷ்மிரி வார்த்தையான ‘லட்டு’ என குறிப்பிடுகிறது. அமைதி தொடர்கிறது. பிறகு தாரிக், “இதற்கு பெயர் துர்கைட்டி,” என பதிலளிக்கிறார்.
அவர் பயிற்சியை மேலும் தொடர்கிறார். 30 மாணவர்கள் கொண்ட வகுப்பில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான், எல்லா பொருட்களின் பெயர்களிலும் தாய்மொழியான ஷினாவில் தெரிந்து வைத்திருக்கிறார். “இது போல நிறைய வார்த்தைகள், வேறு மொழிகளை நாம் பேசத் தொடங்கி விட்டதால் மறைந்து போய்விட்டன,” என்கிறார் தாரிக்.

Muzamil Bhat
குரேஸின் குழந்தைகள் வீடுகளிலிருந்து கிளம்பும்போது, பள்ளிகளில் பேச உருது அல்லது காஷ்மிரி போன்ற மொழிகளை பயன்படுத்துகின்றனர். மேலதிகமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் கூட கற்றுக் கொள்கின்றனர்.
தாரிக், “குரேஸில் 12 மாதங்கள் வாழும் குழந்தை, மொழி பேசுவதில் எந்த சிரமமும் படுவதில்லை,” என்கிறார். ஆனால் வேலை, கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் காலநிலை பிரச்சினைகளுக்காகவும் புலம்பெயருபவர்கள், தாய்மொழியை சரளமாக பேச சிரமப்படுகின்றனர்.
தாரிக் பேசுவதை கவனித்து, அவரின் சக ஆசிரியர், “என் இளைய மகள், செல்பேசி காணொளிகளை பார்த்து அவளே உருது மொழியைக் கற்றுக் கொண்டாள்,” என்கிறார். அவர் அவளுக்கு மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் ஷினா மொழியை கற்றுக் கொள்ள முயற்சிக்கும்போது, அவரது மகள் ஆர்வம் காட்டவில்லை. அவள் மொழி பேசத் தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. மூத்த மகள், ஷினா மொழி பேசுவார். காரணம், அவர் படித்த பள்ளியில் தாய்மொழி வழி கல்வி இருந்தது.
சந்தையிலும் வீட்டிலும் பேசும்போதுதான் ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கும் என நினைக்கிறார் தாரிக். குரேஸை விட்டு வெளியே செல்லும்போது பயன்படும் காஷ்மீரி மற்றும் உருது மொழிகளை குழந்தைகள் கற்பதை அவர் எதிர்க்கவில்லை. “ஆனால் நம் மொழியை மறப்பது, நம் அடையாளத்தை மறப்பதற்கு ஒப்பானது,” என்கிறார் அவர்.
ஆனால் அச்சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர், “தார்தே” (இழிசொல்) என அழைக்கப்படுவோமோ என்கிற அச்சத்தில் தங்களின் தார்திக் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

Muzamil Bhat

Muzamil Bhat
*****
பந்திப்பூரிலிருந்து குரேஸின் வழியாக கில்கித்துக்கு வணிகம் மற்றும் யாத்திரைக்காக செல்லும் காஷ்மீரிகளுக்கு குரேஸ் பள்ளத்தாக்குதான் பட்டு பாதை. ஹஜ் யாத்ரிகர்கள் பயன்படுத்தும் பாதையும் இதுதான்.
குரேஸ் மற்றும் திராஸ் பகுதியில் வசிக்கும் தார்த் ஷின் பழங்குடி மக்களுக்கு பண்பாடு மற்றும் மொழியியல் வேர்கள் தார்திஸ்தானில் இருக்கின்றன. காஷ்மிர் பள்ளத்தாக்கு முதல் கில்கித் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை நீண்டிருந்த வரலாற்று பகுதிதான் தார்திஸ்தான். காஷ்மிரிகளுக்கும் தார்த்களுக்குமான உறவு, 1947ம் ஆண்டு பிரிவினை காலத்துக்கும் முந்தையது என்கிறார் மசூத் அலி ஹசன் சமூன். “பிரிவினை நேற்றையக் கதை. பல நூற்றாண்டுகளாக தார்த்கள், ஜம்மு காஷ்மீரில் வாழ்கின்றனர்,” என்கிறார் 73 வயது ஜம்மு காஷ்மீர் அரசின் முன்னாள் கல்வி இயக்குநர்.
12ம் நூற்றாண்டு காஷ்மீரிய வரலாற்றாய்வாளரான கல்ஹானா, குரேஸின் தார்த்கள் பற்றி ராஜாதரங்கினியில் சொல்லி இருக்கிறார். காஷ்மீரிய அரசர்கள் பற்றிய காப்பியம் அது. குரேஸின் அரசர்கள் எப்போதும் பள்ளத்தாக்கின் ஆட்சியாளர்களுடனான போர்களில் இருந்ததாக சொல்லும் மசூத், அது போன்றவொரு குறிப்பிடத்தகுந்த போர், துத்காத் மலையில் தார்த்களுக்கும் ஹர்ஷாவுக்கும் (இந்தியாவின் ஹர்ஷவர்தனா அல்ல) நடந்ததாக கூறுகிறார்.
சொந்தமாக எழுத்துரு இல்லாமல், இந்த மொழி வாய்மொழி பாரம்பரியங்களிலும் நாட்டுப்புற கதைகளிலும் பாடல்களிலும் தழைத்திருக்கிறது. ஆனால் பல பத்தாண்டுகளாக தொடரும் பருவகால புலப்பெயர்வு, எல்லை தாண்டிய குண்டு வீச்சு, அரசியல் மற்றும் பண்பாட்டு குழப்பங்கள் போன்றவற்றால், இந்த மக்களை தங்களின் தாய்மொழியிலிருந்து விலக வைத்துக் கொண்டிருக்கிறது.
”நீங்கள் ஸ்ரீநகர் செல்லும்போது, 50 வீடுகளில் ஒரு குடும்பம் மட்டும் ஷினா மொழி பேசினால், எப்படி மொழி பிழைக்கும்?” இச்சமூகத்தின் குழந்தைகள், பிற குழந்தைகளுடன் காஷ்மீரி அல்லது பிற பொது மொழிகளில் பேசுகின்றன. ஒரு தலைமுறை வேண்டுமானால் இம்மொழியை தொடரலாம் என்னும் அவர், அடுத்த தலைமுறையில் மொழி இருக்காது என்கிறார்.
தற்போது மசூத் ஒருங்கிணைந்த ஷினா எழுத்துரு உருவாக்கும் பணியில் இருக்கிறார். அவர் வடக்கு காஷ்மீரின் பந்திப்பூர் பகுதியில் வசிக்கிறார். “ஷினாவுக்கென இதுவரை இரண்டு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஜார்த் ஆபிரகாம் க்ரையர்சன்னால் உருவாக்கப்பட்ட ரோம எழுத்து. இன்னொன்று மாவட்ட கல்வி அதிகாரியான டாக்டர் ஷுஜா நாமுஸால் உருவாக்கப்பட்டு கில்கித் அவுர் ஷினா ஜபான் என பெயரிடப்பட்டுள்ளது.”
ஆனால் இரண்டிலும் ஆவணப்படுத்துதல் அவர்களின் ஆய்வுகளை ஒட்டி மட்டும்தான் இருக்கிறது. க்ரையர்சன்னோ டாக்டர் நாமுஸோ அந்த மொழி பேசுபவர்கள் அல்ல. எழுத்துரு தொடர்பான பல அம்சங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஷினா மொழியில் நான்கு தனித்துவ ஒலிகள் இருப்பதாக மசூத் சொல்கிறார். “அவை உருது, ஃபார்சி போன்ற பிற மொழிகளில் இல்லை. காஷ்மீரியில் கூட இல்லை.” எனவே தனித்துவமான எழுத்துருக்கள் தேவை. ஆனால் எவரும் வெற்றியடையவில்லை. மேலும் அவர், பாகிஸ்தானின் கரகோரம் பல்கலைக்கழக பேராசிரியரான முகமது அமின் ஜியா, கணிணிகள் வந்த காலத்தில் இம்மொழிக்கான இலக்கண விதிகளை எழுதினார் எனக் கூறுகிறார். ஆனால் அதுவும் எழுத்துருவில் கவனம் செலுத்தவில்லை.
மசூத் சொல்வதை ஏற்கும் தாரிக், “எழுத்துரு இன்றி எப்படி நாம் எழுதவோ ஒரு மொழியை போதிக்கவோ முடியும்? ஷினா இலக்கணம் பதிப்பிடப்பட்டதும், இச்சமூகத்தை சேர்ந்த பலரும் ஒரு வாட்சப் குழுவை கூட உருவாக்கினார்கள். ஆனால் அதுவும் உதவவில்லை,” என்கிறார்.
ஃபரீத் சொல்கையில், “ஷினா இலக்கியம் பெரும்பாலும் உருதுவில் எழுதப்படும் நிலையில் சரியான ஷினா எழுத்துரு பயனை தரும்,” என்கிறார். புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டால், குழந்தைகள் தம் தாய்மொழியுடன் இன்னும் நெருக்கமாகும் வாய்ப்பு ஏற்படும். “எங்களின் குழந்தைகள் காஷ்மீரிலிருந்து ரஷ்யா, ஜெர்மனி போன்ற பிற நாடுகளுக்கு செல்கையில், இம்மொழிகளை நாம் கற்றுக் கொடுப்பதில்லை, இல்லையா? அங்குதான் அம்மொழிகளை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.”

Muzamil Bhat

Muzamil Bhat
மொழிகளை உயிர்ப்புடன் வைப்பதில் இலக்கியம் முக்கிய பங்கு வகிப்பதாக மசூத் சொல்கிறார். காஷ்மீரி இலக்கியம், லால் தேத் மற்றும் ஷேக் உல் ஆலம் (நுந்த் ரிஷி என்றும் அழைக்கப்படுவார்) போல மத்திய மற்றும் நவீன கால கவிஞர்கள் பலரின் கவிதைகள் போன்றவற்றை உதாரணம் காட்டுகிறார். இன்றும் பல உரைநடைகளும் கவிதைகளும் காஷ்மீரியில் எழுதப்படுவதாக சொல்லும் அவர், மொழி பல காலத்துக்கு உயிர்த்திருக்க செய்யும் வழி இது என குறிப்பிட்டு, “ஆனால் ஷினா மொழிக்கு இந்த நிலை இல்லை,” என்கிறார் அவர்.
1975ம் ஆண்டு, காஷ்மீரி பல்கலைக்கழகத்தில் உருது மற்றும் பாரசீக மொழிகளை போதிக்கும் முழு நேர வேலை இருந்த காலத்திலிருந்தே தனித்துவமான எழுத்துருவை ஷினாவுக்கு உருவாக்கும் பணியை செய்து வருகிறார் மசூத். “நாட்டுப்புற கதைகளையும் பாடல்களையும் சேகரிப்பேன்,” என்னும் அவர், “ஆனால் இவற்றை எப்படி எழுதுவது!” என்ற கேள்வியும் கொண்டிருக்கிறார்.
பிற்காலத்தில் கல்வி இயக்குநராக அவர் ஆன பிறகு, நான்காம் வகுப்பிலிருந்து பள்ளிகளில் தாய்மொழியில் போதிக்கப்பட வேண்டும் என்கிற புதிய மொழி கொள்கை ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டது. “எழுத்துருவுக்கான சரியான காலம் அது,” என்னும் அவர், அம்மொழியை கணிணியில் இயங்குவதற்கு ஏற்பவும் வடிவமைத்திருக்கிறார்.
எழுத்துரு உருவாக்க முயற்சித்த அவர், மொழி கையேடு ஒன்றும் எழுதினார். பிறகு அவர் வேலையை விட்டுவிட்டார். “வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வந்து விட்டது,” என்னும் அவர் அதை பிரசுரிக்க முடியாமல் போய்விட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு, அவரது முயற்சிகளை மீண்டும் தொடங்கினார்.

Muzamil Bhat

Muzamil Bhat
எழுத்துருவை தரப்படுத்தும் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, புமிகி ஷினா கிதாப் என்கிற அவரது பாடப்புத்தகம் நான்காம் வகுப்பு மாணவர்களுக்காக அச்சிடப்பட்டது. அச்சமயத்தில் கூட ஷினா மொழி படிப்பு, தேர்வு படிப்பாகதான் இருந்தது. “மொழியியல் செயற்பாட்டாளரானேன். என்னுடைய பகுதியில் எழுத்துருவை தரப்படுத்தி விட்டேன்,” என்கிறார் அவர். பிறகு, தாய்மொழியை ஆவணப்படுத்தும் பல முயற்சிகள் நடந்தன. ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பல்கலைக்கழக மொழியியல் துறை, ஷினா இலக்கண புத்தகத்தை பதிப்பித்தது.
எழுத்துரு தரப்படுத்தப்படும் வரை, பத்தாம் வகுப்பு வரையேனும் ஷினா மொழி வழிக் கல்வியை உறுதிபடுத்தினால், இன்னும் கொஞ்ச காலம் மொழி நீடிக்கும் என்கிறார் மசூத். இச்சமயத்தில் உயர்கல்விக்கோ வேதியியல், இயற்பியல் போன்ற படிப்புகளுக்கோ ஷினாவை பயன்படுத்த முடியாது என்ற போதிலும், “மொழி அழிந்து விடும் நிலையில் இருப்பதால்” ஒருவகை அவசர கவனம் தேவைப்படுகிறது.
அவர் வேலை பார்த்த காலத்தில் குரேஸில் புழக்கத்தில் இருந்த அவரை பற்றிய ஒரு சம்பவத்தை சொல்கிறார். அலுவலத்தில் அவருடன் எவரேனும் காஷ்மீரி அல்லது உருது மொழியில் பேசினால், “நான் அவர்களை திட்டி, ஷினா மொழியில் நான் பேசுகிறேன்… எனவே நீங்களும் அம்மொழியில்தான் பேச வேண்டும்! எனக் கூறுவேன்.”
மேலும் அவர், “உங்கள் குடும்பத்துடன் பேச வேண்டுமெனில், ஆங்கிலத்திலா பேசுவீர்கள்? எந்த பிரஞ்ச் மொழிக்காரரும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை. இந்தியர்களாகிய நமக்கு மட்டும்தான், ஆங்கிலத்தை உயர்ந்த மொழியாக கருதும் நோய் இருக்கிறது,” என்கிறார்.
இன்று குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதாக சொல்லும் அவர், குழந்தைகளின் மூளைத் திறன்கள் யாவும் வெளிநாட்டு மொழிகளை பேசுவதிலேயே தீர்ந்து விடுகின்றன என்கிறார். “ஆங்கிலம் பேசுபவர்கள்தான் அறிவாளிகள் என்று இல்லை. இந்தியர்களாகிய நாம் என்ன முட்டாள்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் வெளிநாட்டு மொழிகளை கற்பதில் நாம் நேரம் செலவழித்தால், நம் இந்திய மொழிகள் வளராது,” என்கிறார் அவர்.

Muzamil Bhat

Muzamil Bhat

Muzamil Bhat

Muzamil Bhat
ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வி மொழி, குழந்தையின் தாய்மொழியாக இருக்க வேண்டுமென புதிய கல்வி கொள்கை அறிவுறுத்துகிறது. “இந்தியாவின் கல்வித்துறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்ல விஷயம் இது. ஆனால் சவால் அதிகமாக இருக்கும் பணி,” என்கிறார் மசூத்.
கல்வி வாரியம் இம்முறையை காஷ்மீரி மற்றும் டோக்ரி மொழிகளில் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கொண்டு வந்து, அமலாக்கியிருக்கிறது. ஷினா மொழியிலான அவரது பாடப்புத்தகம் பிரசுரிக்கப்பட அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பி ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது.
இவற்றுக்கிடையே பிற செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, ஷினா எழுத்துருவை தரப்படுத்த மசூத் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். “சீக்கிரமாக இந்த பணி முடியுமென உறுதி தர இயலாது. நிறைய வேலை இருக்கிறது. எனக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
செய்தியாளர், இக்கட்டுரைக்கு உதவிய மசூத் அல் ஹசன் சமூன், பஷீர் அகமது தெரூ, ஃபரீத் அகமது லொனா மற்றும் அப்ரார் உல் அலம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
குலாம் ரசூல் முஷ்டாக்கின் ஷினா கவிதையை ஃபரீத் மொழிபெயர்க்க, பிரதிஷ்தா பாண்டியா அதை சரிபார்த்தார். மசூத் அல் ஹசன் சமூனின் கவிதை ஆங்கிலத்துக்கு முசாமில் மற்றும் பிரதிஷ்தா பாண்டியாவால் மொழிபெயர்க்கப்பட்டது
பாரியின் அருகி வரும் மொழிகளை அடையாளப்படுத்தும் பணி (ELP), இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள மொழிகளை, அவற்றை பேசும் மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
பாரிசீனியர் மானியப்பணி 2025-ன் ஆதரவில் இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/in-gurez-home-is-not-where-the-word-is-ta