அறுபது வயதுகளில் இருக்கும் சகோதரர்களான அப்துல் சலாம் கான் மற்றும் நஸ்ருல்லா கான் ஆகியோர் அமர்ந்திருக்கும் மஞ்சள் தார்ப்பாயில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட செர்ரி பழங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அவர்கள் கவனமாக குவிக்கின்றனர். தார்ப்பாயில் பட்டு தெறிக்கும் சூரிய ஒளி, தற்போதைய சூழல் கொடுத்திருக்கும் சோர்வு நிறைந்த அவர்களின் முகங்களில் ஜொலிக்கிறது.
அவர்களுக்கு சொந்தமாக இருக்கும், ஒரு ஏக்கரின் கால் பங்குக்கும் குறைவான பழத்தோட்டம் மத்திய காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தின் சோராஃப் ரா கிராமத்தில் இருக்கிறது.
”இந்த வருடம் ரொம்பவே கஷ்டம்,” என்கிறார் அப்துல் சலாம், ஜூன் மாதத்தின் காலை ஒன்றில். “40 வருடங்களாக இந்த வேலை செய்கிறோம். ஆனால் இது போன்ற ஒரு பருவத்தை எப்போதும் பார்த்ததில்லை. வானிலையும் குறைந்து விட்ட சுற்றுலா பயணிகள் வரத்தும் ஒன்றாக எங்களை தாக்கியிருக்கிறது,” என்கிறார் 65 வயதாகும் அவர்.
பாஷ்டூன் சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள், இந்த வருடத்தின் தொடக்கத்தில், சொராஃப் ராவின் பல பகுதிகளில் இருக்கும் இரண்டு ஏக்கர் செர்ரி பழத்தோட்டங்களை ஒத்திக்கு விட்டனர். அவர்களின் சொந்த ஊரான கோட்லி பாகிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீநகருக்கு வடக்கில் 49 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஊர் அமைந்திருக்கிறது.
குடும்ப உறுப்பினர்களும் பணிக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் ஒன்றாக அறுவடை செய்தனர். ஆனால் மாதக்கணக்கில் உழைப்பு செலுத்திய பிறகு, வாங்குபவர்கள் இல்லை.














