“இங்கு என்ன செய்கிறேனா? இங்கு பக்கத்தில்தான் வாழ்கிறேன்,” என்கிறார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் தன் வீட்டு பக்கமாக கையைக் காட்டியபடி சுக்ராம் குமாதி. 60 வயதுகளில் இருப்பதாக நம்பும் பெருமுதியவரான சுக்ராம், ஒரு மரத்தடி நிழலில் உள்ள கல்லில் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் பொருட்கள்தான் நம்மை கேள்வி கேக்கத் தூண்டின.
கிட்டத்தட்ட 20 லிட்டர் வெள்ளை திரவம் ஒரு பெரிய கேனில் இருந்தது. அதற்கு பக்கத்தில், மிகப் பழைய, அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக் பக்கெட் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பெயிண்ட் இருந்த பக்கெட்டாக அது இருந்திருக்கலாம். இப்போது அதில் நீர் இருக்கிறது. பல வண்ண குடுவைகள் அதில் மிதந்து கொண்டிருந்தன. தரையில் கிடைக்கும் சிவப்பு பிளாஸ்டிக் தம்ளரை தாண்டி, வாடிக்கையாளர்களுக்கு புரியும் நிறங்களிலான இரண்டு குடுவைகளும் இருந்தன. வெளிர்சிவப்பு நிற குடுவை, மஞ்சள் கேன் மீது வைக்கப்பட்டிருக்கிறது. ஆலிவ் பச்சை பக்கெட்டுகளின் மீது நீலப்பச்சை நிற குடுவை இருக்கிறது.
இது கோடோலி கிராமம். சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியிலுள்ள அபுஜ்மத் பகுதியில் உள்ளது. நாராயண்பூரிலிருந்து வரும்போது இரண்டாம் கிராமமாக இருக்கும்.
என்ன செய்கிறார் என்பதை பொறுமையற்று எனக்கு விளக்க முற்பட்டார் சுக்ராம். எங்கள் குழுவில் எனக்கு மட்டும்தான் புரியவில்லை.
“சல்ஃபி, சல்ஃபி…” என்கிறார் அவர் என் அறியாமையைக் கண்டு கண்கள் உருட்டியபடி. நாங்கள் இருவரும் கொண்டு சென்றிருந்த கேமராக்களை நான் பார்த்தேன். ஆனால் அவர் செல்ஃபி எடுக்க எங்களை கூப்பிடவில்லை.





