விந்திய மலைகளில் சூரியன் அஸ்தமித்துவிட்டது, பறவைகள் காட்டிற்குத் திரும்பிவிட்டன. தமா சாஸ்தியா, பயணத்தைத் தொடங்க இதுதான் சரியான நேரம். சுகத் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து, இந்த விவசாயி, பாறைகள் நிறைந்த பாதையில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஒரு நீரூற்றுக்குச் செல்கிறார். அவர் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து, நீர் பானைகளை நிரப்பி, காலையில் வீடு திரும்புவார். "நீரூற்றில் இரவு அதிக தண்ணீர் வரும்," என்று விளக்குகிறார், 50 வயதான தமா.
534 பேர் கொண்ட (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) இக்கிராமத்தின் நீர் தேவை மொத்தத்தையும் ஒன்று அல்லது இரண்டு நீரூற்றுகளால் பூர்த்தி செய்ய முடியாது. அதிகாலையிலேயே, சுகத் கிராம மக்கள் தங்கள் தண்ணீர் கேன்களை எடுத்துக் கொண்டு, கழுதைகளையும் கூட்டிக்கொண்டு, குளிப்பதற்காகவும், தண்ணீர் எடுப்பதற்காகவும் மலையிலிருந்து நர்மதா நதிக்கு இறங்கிச் செல்கின்றனர். மாலையிலும் இதே வேலைதான். குளிப்பது, பாத்திரங்கள் கழுவுவது மற்றும் தண்ணீர் சேகரிப்பது என இப்பணிகளுக்காகவே கிராம மக்கள் தினமும் சராசரியாக மூன்று மணி நேரம் செலவிடுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தண்ணீருக்கான உரிமையை வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக்கியுள்ளது. எனவே இது கடுமையான மனித உரிமை மீறலாகும்.
நதியில் இருந்து வீடு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தண்ணீர் எடுக்க அவர்கள் மலை ஏறி இறங்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது. ஒரு வாரத்தில், இது சுமார் 15 மணி நேர நடைபயணமாகிறது. ஏனெனில் நிரம்பிய குடங்களுடன் மலையில் ஏறுவதற்கு, மலையிலிருந்து இறங்குவதை விட இரு மடங்கு நேரம் ஆகிறது.
அதிகாலையில், தமாவின் மகன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அந்த இளைஞர், எட்டு பேர் கொண்ட தங்கள் குடும்பத்திற்காக, தண்ணீரை நிரப்பிய கேன்களை பத்திரமாக ஏற்றுவதற்காக, அவர்களின் சொந்த கழுதைகள் இரண்டையும் அழைத்து வருவார். இந்த வேலைக்கு பழக்கப்பட்டுவிட்ட கழுதைகள், தாங்களாகவே வீட்டை நோக்கிச் சென்றுவிடும் அளவுக்கு பழகிவிட்டது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நர்மதா மற்றும் அதன் துணை நதியான ஹத்னியின் கரையில் வாழ்ந்த சுகத் மற்றும் அருகிலுள்ள ஜந்தானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பிலாலா பழங்குடியினருக்கு தண்ணீர் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. தண்ணீர் ஏராளமாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருந்தது.
நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் கிராமங்கள் நீரில் மூழ்கியபோது இவை அனைத்தும் மாறிவிட்டன. 2014-ம் ஆண்டு வாக்கில், அணையின் கதவுகள் மூடப்பட்டதால், சுகத் மற்றும் ஜந்தனா உட்பட மத்தியப் பிரதேசத்தில் உள்ள சுமார் 200 கிராமங்கள் நீரில் மூழ்கின. அந்த ஆறு அப்பகுதி மக்களின் விவசாய நிலங்களை அடித்துச் சென்றது. தாமா மற்றும் அவரது குடும்பத்தினரைப் போல, அங்கிருந்து குடிபெயர்ந்து அல்லது மாறி செல்லாதவர்களை, தண்ணீர், மின்சாரம் மற்றும் முறையான சாலை வசதி இல்லாத விந்திய மலைகளுக்குச் செல்ல, கட்டாயப்படுத்தினர்.




























