பாரியின் பயிற்சிப் பணியில் சேர வேண்டுமென ஒவ்வொரு வருடமும் பல இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். இந்த வருடத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் எங்களை அணுகினர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்கள் பயிற்சிப் பணி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். மும்பையிலிருக்கும் சமூக அறிவியல்களுக்கான டாடா நிறுவனம், பெங்களூருவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், சோனெபட்டின் ஃப்ளேம் பல்கலைக்கழகம், ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகம் போன்ற இடங்களை சேர்ந்த மாணவர்கள் அவர்கள்.
இத்தனை வருடங்களில் எங்களின் பயிற்சிப் பணி திட்டங்கள், அளவிலும் சாத்தியங்களிலும் வளர்ந்திருக்கிறது; பல புதிய தேவைகளையும் இலக்குகளையும் கூட உட்செரித்திருக்கிறது. எனினும் இறுதி நோக்கம் மட்டும் மாறவே இல்லை. நம் காலத்து பிரச்சினைகளான அசமத்துவம், அநீதி, விளிம்புநிலைக்கு ஒதுக்கப்படுதல் போன்றவற்றை இளைஞர்கள் ஆராயந்து கையாளத் தொடங்க வேண்டுமென்பதே அந்த நோக்கம் ஆகும்.
பாரியின் பணியில் பங்களிக்க இப்பயிற்சியாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடுவது, நேர்காணல் செய்வது, எழுத்தாக்கம் செய்வது, விவரங்களை சரிபார்ப்பது, புகைப்படம் எடுப்பது, படம்பிடிப்பது மற்றும் கிராமப்புறத்துக்கும் விளிம்புநிலைக்கும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பற்றிய கதைகளை படங்களிட்டு விளக்குவது போன்ற பணிகளும் இதில் அடங்கும். இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஆர்வலர்கள் பங்களித்துள்ளனர்.
நூலக அறிக்கைககள் செய்வது, திரைப்படங்கள் எடுப்பது, வீடியோக்கள் பதிவு செய்வது, சமூக ஊடக இடுகைகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தேவையிருப்பின் கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் உதவுகிறார்கள்.
பல மாணவர்கள், ஆராயந்து அறிந்து, முன்னிலைப்படுத்தி எழுத விழைந்த ஒரு விஷயம், பாலின பாகுபாட்டின் அநீதிகளாகும். இது குறித்த அவர்களின் கதைகளுள் சில பின்வருமாறு:
பயிற்சியாளர் ஆதியேதா மிஸ்ராவின் இயற்கை உபாதைக்கு இடைவேளை இல்லை கட்டுரை, மேற்கு வங்காள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள், இயற்கை உபாதைகளை கழிக்க தோட்டங்களில் வழியின்றி படும் கஷ்டங்களைப் பற்றி பேசியது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் படிக்கும் ஆதியேதா, உண்மை சூழலை வெளிப்படுத்தியதற்காக அப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களையும், அவர்கள் வேலை செய்த தோட்டங்களின் அடையாளங்களையும் மறைக்க வேண்டியிருந்தது.






