”என் தந்தை என்னை படிக்க விட்டிருந்தால், நான் காவல்துறை அதிகாரி ஆகியிருப்பேன்,” என்கிறார் அவர் ஏக்கத்துடன், சோப்பு நுரையுடன் சிங்கில் நிறைந்திருக்கும் பிசிபிசுப்பு நிறைந்த பாத்திரங்கள் பக்கம் திரும்பி. அது காலை 9 மணி. இன்னும் குடியிருப்பின் பிற வீடுகளுக்கு அவர் விரைய வேண்டும். அனிதா அக்கா என அறியப்படும் அவர், வீட்டுக்கு செல்வதற்கு முன் இன்னும் ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்து முடிக்க வேண்டும். வட மேற்கு ஹைதராபாத்தில் இருக்கும் நகர்ப்புறமான நல்லகண்ட்லாவிலிருந்து பக்கத்து மாவட்டமான சங்கரெட்டியிலுள்ள படேஞ்செரு வீட்டுக்கு 10 கிலோமீட்டர் தூரம் அவர் பயணிக்க வேண்டும்.
25 வயது நிறைந்த அனிதா ராதோட், நான்கு குழந்தைகளுக்கு தாய். தெலங்கானாவில் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் லம்பாடி சமூகத்தை சேர்ந்தவர் அவர். புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்ப்பதில் நாட்டிலேயே ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத்தின் குடியிருப்புகளில் பணிபுரியும் பல புலம்பெயர் தொழிலாளர்களில் அவரும் ஒருவர். நீண்ட மணி நேரங்களுக்கு வேலை பார்க்க வேண்டியிருப்பதால், அவரின் குடும்பத்தின் பிறரை சல்லாகிட்டா தண்டாவிலும் குழந்தைகளை பூர்விகமான மைனெலியிலுள்ள பெற்றோரிடமும் விட்டிருக்கிறார். தன் கனவுகளையும் அவர் கைவிட்டிருக்கிறார்.
அவரின் அன்றாடம் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. சமைத்தல், துவைத்தல், வீட்டை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை செய்கிறார். காலை 5.30 மணிக்கு ரங்கரெட்டி மாவட்டத்திலுள்ள லிங்கம்பள்ளிக்கு செல்கிறார். அங்கிருந்து 20 ரூபாய் கொடுத்து ஆட்டோவில், நல்லகண்ட்லாவில் இருக்கும் குடியிருப்பை 6 மணிக்கு அடைகிறார். 2023ம் ஆண்டில் தெலங்கானா அரசாங்கம் கொண்டு வந்த மகாலஷ்மி திட்டம், அரசு பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்க வகை செய்கிறது. பணியிடத்துக்கு செல்லும் செலவை அனிதா சேமிக்க இத்திட்டம் உதவுகிறது.














